வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 5 ஆம் திகதி வவுனியாவிற்கு விஜயம் செய்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னி மாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் நீதிமன்ற கட்டளையினை மீறி ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததாக தெரிவித்து வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அன்றையதினம் (05.01.2024) மாலை நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டனர்.
இதன்போது சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மற்றய பெண் அன்றையதினமே பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், குறித்த வழக்கானது இன்று (12.01.2024) வவுனியா நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சங்கத்தின் தலைவியை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா,
நீதிக்கான குரல்களை நசுக்கும் செயற்பாடு
“நாங்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கே அனுமதி கேட்டிருந்தோம். மாறாக எந்தவிதமான வன்முறைகளையும் நாம் மேற்கொள்ளவில்லை.
அரச சொத்துக்களை சேதப்படுத்தவில்லை. வீதியினை மறிக்கவில்லை. ஆனால் பொலிஸார் எங்களை பெண்கள் என்றும் பார்க்காது அநாகரிகமான முறையிலேயே கைது செய்தனர். கொலைக் குற்றங்களை செய்தவர்களை கூட இப்படி நடாத்தியிருக்கமாட்டார்கள்.
இது எமக்கு மனவருத்தமாக உள்ளது. நீதிக்கான குரல்களை நசுக்கும் செயற்பாடகாவே நாம் இதனை பார்க்கின்றோம்.” என்றார்.