பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னதாக பிரதிவாதிக்கு தாக்குதல்கள் குறித்த முன்னறிவிப்பு கிடைத்திருந்தது.
அத்துடன் 2022 இல் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலின் போது அவருக்கு முன்னறிவிப்பு கிடைத்தது. எனினும் அவர் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியதாக ரகுமான் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேசபந்து தென்னகோன் தான் வகித்த பதவிகளுடன் தொடர்புடைய பொறுப்புகளை நிறைவேற்ற இயலாமையை இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் தென்னகோனை நிரந்தரமாக இலங்கையின் பொலிஸ் மா அதிபராக நியமிக்க முயற்சித்தால் அது சட்டத்தின் மீது நேரடித் தாக்குதலை ஏற்படுத்தும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோனை நிரந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை தொடர்ச்சியாக மீறுவதாக அமையும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
தேசபந்து தென்னக்கோனை நிரந்தரமாக மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கினால், அவர்களின் செயற்பாடுகளும் அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை தொடர்ச்சியாக மீறுவதாக அமையும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் பதவியை ஏற்பதற்கும், மனுவின் விசாரணை மற்றும் இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை பணிகளைச் செய்வதற்கும் இடைக்காலத் தடை விதிக்குமாறு முஜிபுர் ரகுமான் தனது மனுவில் கோரியுள்ளார்.
இதேவேளை பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுமதி வழங்குவதை தடுக்கும் வகையில் அரசியலமைப்பு பேரவைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசபந்து தென்னகோன், சட்டமா அதிபர் மற்றும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முஜிபுர் ரஹ்மானின் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.