பனைவளம் வாழ்வியலின் ஓர் அர்த்தமுள்ள அத்தியாயம்: உரைநடை நோக்கு



ஆய்வாளர். சிறாஜ் மஸுர்

பனையோலைத் தொப்பி, பனையோலைப் பயணப் பொதியோடு, சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.புத்தகக் காட்சியிலிருந்து திரும்பியபோது இவரைக் கண்டேன்.


என்ன இது? வித்தியாசமாக இருக்கிறதே என்று எண்ணிக் கொண்டே அவர் அருகில் போய் அமர்ந்தேன். பேச்சுக் கொடுத்தபோது, அவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் என்று தெரிந்தது. முன்பு நாகர்கோவிலில் இருந்தாராம். இப்போது மும்பையில் மெதடிஸ்த திருச்சபையில் பாதிரியாராக இருப்பதாகச் சொன்னார்.


காட்சன் சாமுவேல் (Godson Samuel), ஒரு பனைச் செயற்பாட்டாளர். தன் வாழ்நாளில் பெரும்பகுதியை பனை வளர்ச்சிக்கும் பனை சார் வாழ்வியலுக்கும் அர்ப்பணித்திருக்கிறார். 


மும்பை நகரிலிருந்து நாகர்கோவில் வரை, 'பனைமர வேட்கைப் பயணம்' ஒன்றைச் செய்திருக்கிறார்.  பனையையும் பனைசார் வாழ்வியலையும் தேடி சுமார் 3000 கிலோ மீற்றர் தூரம், தனது மோட்டார் சைக்கிளில் பயணித்திருக்கிறார். அந்த அனுபவங்களை 'பனைமரச் சாலை' என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறது.


'பனை எழுக! பனை வாழ்வியலின் பயணக் கட்டுரைகள்' என்ற காட்சன் சாமுவேலின் இன்னொரு நூலும் உள்ளது. பனையோலைச் சித்திரங்களிலும் ஆர்வமானவர். இந்தியாவின் பல பாகங்களுக்கும் மாலைதீவுக்கும் இலங்கைக்கும் பயணம் செய்திருக்கிறார். இந்தப் பயணங்களின் நோக்கமே பனை வாழ்வைத் தேடித்தான் என்றார். இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்குப் போன நினைவுகளை மீட்டினார்.


மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன என்ற கவலை எதுவும் இன்றி பனைத் தொப்பி, பனை பயணப் பொதியோடு, கூச்சமே இல்லாமல் பயணிக்கிறார் இந்த மனிதர்.காட்சன் சாமுவேல் என்று தேடினால் கூகிளில் பல தகவல்கள் கிடைக்கின்றன.Mission Leader என்பது இதுதான். தனக்கு பெருவிருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்து, அந்த உயர் பணிக்காக சலிப்பின்றி உழைத்தல்; அந்தப் பெரும்பணியில் தோய்ந்திருத்தல்; அதில் ஓர்மையோடு பயணித்தல்; அர்ப்பணிப்போடு இயங்குதல்.


'பனை வாழ்வியலைச் சுமந்து செல்கிற' இந்த மனிதருக்கு சென்னையில் ஏதோ விருதொன்றை வழங்குகிறார்களாம். அதற்காகத்தான் மும்பையிலிருந்து சென்னை வந்திருக்கிறார்.


ஓயாத பயணி. துடிப்பான செயற்பாட்டாளர். பயணங்களில் இப்படி வித்தியாசமான மனிதர்களைச் சந்திப்பதே சுவாரசியம்தான்.


Mission Leaders ஆக, இவரிடம் கற்றுக்கொள்ள நமக்கு பல பாடங்களும் படிப்பினைகளும் உள்ளன.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section