உக்ரைன் நாட்டில் 9 பிராந்தியங்களில் சுமார் 1000 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பனிப்பொழிவு, பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களால் 1,025 குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை ரஷ்ய தாக்குதல்களால் மின்சக்தி அமைப்பு பலவீனமடைந்துள்ளதாகவும், இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் குடியிருப்பாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை சுமார் -15 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளதால், இந்த வாரத்தில் மின்சார நுகர்வு மிக அதிகமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.
மக்கள் ஒரே நேரத்தில் பல மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரேனிய அனல் மின் நிலையங்கள் ரஷ்ய தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவை முற்றாக செயற்பாட்டுக்கு வராத நிலையில் மோசமான வானிலை காரணமாக சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் முழு திறனுடன் செயல்பட முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ரஷ்யா உக்ரேனிய மின் அமைப்பை ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்கியது, இதனால் மில்லியன் கணக்கான மக்கள் அடிக்கடி இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.