(A.Mohamed Sabry)
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இரத்தினபுரி உடவலவ அணைக்கட்டு ஊடான வீதியை இன்று முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை குறித்த வீதி முற்றாக மூடப்பட்டிருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதேநேரம், எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி வரை உடவலவ அணைக்கட்டு ஊடாக ஒரு வழிப் பாதை மாத்திரம் திறக்கப்படவுள்ளது.
பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை மீண்டும் வீதி முற்றாக மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் வழமை போன்று மீண்டும் உடவலவ அணைக்கட்டு ஊடான வீதி திறக்கப்படும் என உடவலவ நீர்த்தேக்க பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமைகளை கருத்திற் கொண்டு எம்பிலிப்பிட்டிய நகரின் ஊடாக வீதியை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய களினிப் பாலம் 3 ஆவது கட்டமாக இன்று மூடப்படவுள்ளது.
இதன்படி, இன்று இரவு 9 மணிக்கு குறித்த பாலம் மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த பாலம் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 6 மணிக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.