தேசத்திற்காக' நிதி திரட்டும் காங்கிரஸ்: மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்த உதவுமா?

0

 ’தேசத்திற்காக’ நிதி திரட்டும் காங்கிரஸ் - தேர்தல் செலவுகளை ஈடுசெய்யவா?

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக 'தேசத்திற்காக நன்கொடை’ (Donate for Desh) என்ற பெயரில் இணையம் வாயிலாக கூட்டுநிதி (crowdfunding) திரட்டும் பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது.

இதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளம் மூலம் கட்சிக்கு ரூ.138, 1,380, 13,800 அல்லது அதற்கு மேல் நன்கொடை அளிக்கலாம்.

இந்த இணையதளத்தைத் தொடங்கி வைத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், ‘‘பொதுமக்களிடம் இருந்து உதவி பெற்று நாட்டைக் கட்டியெழுப்ப காங்கிரஸ் கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது இதுவே முதல் முறை,’’ என்றார்.

இந்த பிரசாரத்தின் கீழ் ரூ.6 கோடிக்கு மேல் இதுவரை வசூல் செய்யப்பட்டுள்ளது என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேர் இந்த பிரசாரத்தில் இணைந்துள்ளதாக, காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கான், காங்கிரஸுக்கு வளங்கள் குறைவாக இருப்பதால் இந்தப் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளதாக அர்த்தம் இல்லை எனத் தெரிவித்தார்.

"இது எங்கள் தேர்தல் செலவுகளை ஈடுசெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எங்கள் இலக்குகூட இல்லை. இந்தப் பிரசாரம் ஒரு அரசியல் செயல்பாடு, இதன் மூலம் மக்களை இணைக்க முயல்கிறோம்," என அவர் தெரிவித்தார்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (Association for democratic Reforms) கருத்துப்படி , 2021-22ஆம் ஆண்டில், நாட்டின் எட்டு பெரிய அரசியல் கட்சிகளில், பாஜக சுமார் 6,046.81 கோடி ரூபாய் சொத்துகளுடன் முன்னணியில் உள்ளது, அதே நேரத்தில் காங்கிரஸின் சொத்து மதிப்பு சுமார் 806 கோடி.

அதாவது, காங்கிரஸைவிட ஏழு மடங்குக்கும் அதிகமான சொத்துகள் பாஜகவுக்கு உள்ளது. இந்தியாவில் தேர்தலில் போட்டியிடுவது மிகவும் விலை உயர்ந்தது என்பது இங்கு தெளிவாகிறது.

தேசத்திற்காக நன்கொடை'

அஜய் மக்கான்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

அஜய் மக்கான்

'தேசத்திற்காக நன்கொடை' பிரசாரம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேற்கொள்வது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அஜய் மக்கான், ​​"இது முன்னதாகவே நடந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முன்னதாகச் செய்திருந்தால், இன்னும் சிறப்பாக நாங்கள் பொதுமக்களுடன் இணைந்திருப்போம்," என்பதை ஒப்புக்கொள்கிறார்.

தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் 'தேசத்திற்கு நன்கொடை' பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது குறித்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முனைவர் ஆராத்யா சேத்தியா கூறுகையில், "இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. ‘தேர்தல் பிரசாரத்திற்காக பணம் தேவை, அதற்கு நாம் பணம் வழங்குகிறோம்’ என்ற ரீதியில் மக்கள் இதை எடுத்துக் கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.

’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தித்தாளின் அரசியல் ஆசிரியர் வினோத் ஷர்மாவின் கூற்றுப்படி, "தாமதம்தான் என்றாலும் இது சிறந்த முயற்சி. தாமதமாகச் செய்ததால் எந்த வித்தியாசமும் ஏற்படுத்தாது,” என்றார்.

அதேநேரம் , காங்கிரஸின் இந்தப் பிரசாரத்தை காந்தி குடும்பத்தை வளப்படுத்தும் மற்றொரு முயற்சி என்று ஆளும் பாஜக வர்ணித்துள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனாவாலா கூறுகையில், "அறுபது ஆண்டுகளாக நாட்டைக் கொள்ளையடித்து வரும் நிலையில், இன்று, 'தேசத்திற்கு நன்கொடை' என்ற பிரசாரத்தை நடத்தி வருகின்றனர். 'ஜீப் ஊழல்' முதல் 'அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்', 'நேஷனல் ஹெரால்டு ஊழல்' என அறுபது ஆண்டுகள் ஊழல்கள் செய்து வருகின்றன.

அதுவரை நாட்டின் ஒவ்வொரு பைசாவையும் கொள்ளையடித்து, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, நாட்டையே கொள்ளையடித்து, இன்று ‘தேசத்திற்காக நன்கொடை’ என்ற பிரசாரத்தை நடத்துகிறார்கள்,” என்றார்.

காங்கிரஸின் இந்தப் பிரசாரம் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னர்தான், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸை பாஜக தோற்கடித்தது. அதேநேரத்தில், தேர்தல் பிரசாரத்தின்போது 'இந்தியா’ கூட்டணியின் நடவடிக்கைகளை காங்கிரஸ் முடக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையில், அனைத்து கருத்துக் கணிப்புகளும் பிரதமர் நரேந்திர மோதி நாட்டின் மிகவும் பிரபலமான தலைவர் என்று கூறுகின்றன.

மூன்றாவது முறையாக அவர் பிரதமராக வருவார் என்ற நம்பிக்கையை பாஜக வெளிப்படுத்தி வரும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெறவிடாமல் தடுப்பது எப்படி என்பதுதான் எதிர்க்கட்சிகளின் முன் உள்ள சவாலாக உள்ளது.

நாடாளுமன்ற பாதுகாப்பை மீறியதாக நாடாளுமன்ற கூட்டத்தில் ஏற்பட்ட அமளிக்குப் பிறகு சுமார் 150 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான மோதலின் சமீபத்திய உதாரணம்.

காங்கிரஸின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா கூறுகையில், அடுத்த தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு ‘செய் அல்லது செத்து மடி’ என்ற நிலை எனத் தெரிவித்தார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top