மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சோதனை இட்டதன் மூலம் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஜனாதிபதியிடம் கையளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை மதுவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கம் ஆகியன அழைக்கப்பட்டிருந்தன.
இதற்கைமய, மதுவரித் திணைக்கள சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்தும் குழு திணைக்களத்தின் அதிகாரிகளிடம் வினவியது. அத்துடன், மதுவரித் திணைக்களத்தின் அதிகரித்துள்ள வருமானத்தைத் தொடர்ந்தும் பேண வேண்டியதன் அவசியம் என்றும், தொடர்ச்சியான சோதனைகளை அதிகரிப்பதன் மூலம் மதுபானப் போத்தல்களில் போலி ஸ்டிக்கர்களை ஒட்டும் சம்பவங்கள் குறைவடையும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.
RAMIS அமைப்பின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் வினவப்பட்டது. இந்தத் தரவுக் கட்டமைப்பை ஏனைய அரசாங்க நிறுவனங்களுடன் ஒன்றிணைக்கும் நடவடிக்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தகவல் கட்டமைப்பை ஜனவரி 2024ற்குள் செயற்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மேலும், தற்போது வரிக் கோப்புகளின் எண்ணிக்கை சுமார் 7 லட்சமாக உள்ளதாகவும், எதிர்காலத்தில் இது 10 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்தது.
இது தவிர, வருமான வரியைச் சரியாகச் செலுத்தும் தரப்பினரை மதிப்பிடுவதற்கான அமைப்பைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.
மேலும், இலங்கை சுங்கம் தொடர்பான சட்டங்களை திருத்துவதன் மூலம் எதிர்பார்க்கப்படும் வரி வருவாயை விட அதிகமான வரித் தொகையை சுங்கம் அடைய முடியும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. மேலும், நிலுவைத் தொகையை வசூலிக்க சுங்கத்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நீண்ட நேரம் ஆராயப்பட்டது.