ராபின் மின்ஸ்: ஐபிஎல்-இல் தேர்வான முதல் பழங்குடி வீரருக்கு தோனி கூறிய அறிவுரை

0

 


டிசம்பர் 19ஆம் தேதி, 17வது ஐபிஎல் தொடருக்காக துபாயில் நடைபெற்ற மினி ஏலத்தில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் வெவ்வேறு அணிகளால் வாங்கப்பட்டனர்.

ஜாம்ஷெட்பூரின் குமார் குஷாக்ராவை ரூ.7.20 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராஞ்சியின் சுஷாந்த் மிஸ்ராவை ரூ.2.20 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும் வாங்கியது.

ஆனால், மூன்றாவதாக வாங்கப்பட்டுள்ள ஜார்கண்ட் மாநில வீரர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 21 வயதான விக்கெட் கீப்பரும், இடது கை பேட்ஸ்மேனுமான ராபின் மின்ஸை, குஜராத் டைட்டன்ஸ் அணி 3.60 கோடிக்கு வாங்கியது.

ESPN Cric Info தகவலின்படி, ஐபிஎல் அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெறும் முதல் பழங்குடி வீரர் ராபின் மின்ஸ். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வியாழக்கிழமை ராபின் மின்ஸை சந்தித்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினார்.

ஆனந்தக் கண்ணீரில் ராபினின் தாயும் தந்தையும்

ராபின்

பட மூலாதாரம்,

@HEMANTSORENJMM

பிபிசியிடம் பேசிய ராபின், "இது நடக்கும் என நான் நினைக்கவே இல்லை. ஆனால், அது நடந்தது. யாராவது ஒரு அணியினர் என்னை ரூ.20 லட்சத்திற்கு வாங்கினால், நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், ஏலம் தொடங்கியவுடன் விலை அதிகரித்துக்கொண்டே இருந்தது.

அணியில் தேர்வான பிறகு என் அம்மாவிற்கு தொலைபேசியில் அழைத்து தகவலைச் சொன்னதும், மகிழ்ச்சியில் என் அம்மா அழத் தொடங்கிவி்டார். அப்பாவும் அழுதுவிட்டார். நான் ஐபிஎல் அணியில் தேர்வாகியிருப்பதால், என் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்,” என்றார் ராபின்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தனது முன் மாதிரியாகக் கருதுவதாகக் கூறினார் ராபின்.

"இந்த ஐபிஎல் போட்டியில் தோனியும் விளையாடுவார், நானும் விளையாடுவேன். இது எனக்கு மிகவும் பெருமையான விஷயம். இருந்தாலும் அவருடன் யாராலும் ஒப்பிட முடியாது. நானும் அவரைப் போல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என்பதுதான் எங்களுக்கு உள்ள ஒரே ஒற்றுமை," என்றார் ராபின்.

ராபின் கடந்த நான்கு ஆண்டுகளாக ஜார்கண்ட் அணியில் விளையாடி வருகிறார். இந்தக் காலகட்டத்தில், மகேந்திர சிங் தோனியை பலமுறை சந்தித்து அவரிடம் ஆலோசனைகளைப் பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

“அமைதியான மனதுடன் விளையாடுங்கள், எப்போதும் முன்னோக்கிச் சிந்தியுங்கள் என்று தோனி எப்போதும் கூறுவார்,” என்றார் ராபின். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ராபினை, குஜராத் அணி ரூ 3.60 கோடிக்கு வாங்கியுள்ளது.

இந்தப் பணத்தை வைத்து என்ன செய்வார் எனக் கேட்டபோது, “இந்தப் பணத்தை வைத்து நான் என்ன செய்வேன், என் குடும்பத்தினர் என்ன செய்வார்கள் என்று தற்போது யாரும் யோசிக்கவில்லை. ஐபிஎல் தொடரில் எனது அணிக்காக சிறப்பாக விளையாடி எதிர்காலத்தில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம்,” என்றார்.

என்ன சொல்கிறார்கள் ராபினின் பெற்றோர்?

ராபின்

பட மூலாதாரம்,

ANAND DUTTA

முதலில் கும்லா மாவட்டத்தின் ரைதிஹ் தொகுதியின் சிலம் பண்டன்டோலி கிராமத்தில் வசித்து வந்த, ராபின், கடந்த சில ஆண்டுகளாக ராஞ்சியில் உள்ள நாம்கும் பகுதியில் வசித்து வருகிறார். ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் ஊடகவியலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

ஆனால், ராபின் அவரது வீட்டில் இல்லை. ஜார்கண்ட் மாநிலத்தில் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் அணியில் இடம்பிடித்துள்ள அவர், அந்த அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

வீட்டில் இருந்த ராபினின் தந்தை பிரான்சிஸ் சேவியர் மின்ஸின் மொபைல்போன் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவருக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. அவர் ஒவ்வொருவரிடமும் பேசிக்கொண்டே இருந்தார்.

பிரான்சிஸ் சேவியர் மின்ஸ், ஓர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். 24 ஆண்டுகளாக பிகார் படைப்பிரிவில் பணியாற்றிய அவர், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின், ராஞ்சி விமான நிலையத்தில் பாதுகாப்புக் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

ராபினின் பெற்றோர்

பட மூலாதாரம்,

ANAND DUTTA

தனது மகன் ஐபிஎல் தொடருக்குத் தேர்வாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் பிபிசி ஹிந்தியுடன் பகிர்ந்துகொண்டார்.

“ஐபிஎல் தொடரில் ராபின் தேர்வாவார் என உறுதியாக இருந்தேன். அப்பா, கவலைப்படாதே, ஏதாவது ஒரு அணி வாங்கும் என ராபின் கூறியிருந்தார். 20 லட்சத்துக்காவது எதாவது ஒரு அணி என் மகனை வாங்க வேண்டும், என் மகனின் பெயர் ஏதாவது ஒரு அணியில் இடம்பெற வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன்,” என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், "பட்டாசுகளை முன்னதாகவே வாங்கி வைத்திருந்தேன். என் மகன் தேர்வானால், இன்று வெடிப்போம், இல்லை என்றால், கிறிஸ்துமஸூக்கு வெடிப்போம் என நினைத்தேன். ஆனால், என் மகன் தேர்வானதால், அனைத்து பட்டாசுகளையும் இன்றே வெடித்துவிட்டேன். அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது,” என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ராபினின் தந்தை பிரான்சிஸ் சேவியர்.

தன் மகன் தேர்வானதுதான் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய கிறிஸ்துமஸ் பரிசு என்றார் ராபினின் தாய் ஆலிஸ் மின்ஸ். 'இந்தச் செய்தி வந்ததில் இருந்து எனக்கு அழுகைதான் வருகிறது. தோனி ஜார்கண்டிற்கு பெருமை சேர்த்தது போல் எனது மகனும் அதைச் செய்ய வேண்டும் என்பதே எனது ஒரே கனவு.

ஆலிஸ் மின்ஸ் தனது பள்ளி நாட்களில் கால்பந்து மற்றும் தடகள வீரராக இருந்துள்ளார்.

வலது கைப்பழக்கம் கொண்டவர் இடது கை பேட்ஸ்மேன் ஆனது எப்படி?

ராபின்

பட மூலாதாரம்,

ANAND DUTTA

தொடர்ந்து ராபின் குறித்துப் பகிர்ந்துகொண்ட அவரது தந்தை, “அவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது, அவர் பந்தை குச்சியால் அடிக்க ஆரம்பித்தார். நானே ஒரு கால்பந்து மற்றும் ஹாக்கி வீரராக இருந்தேன். நான் அவருக்கு டென்னிஸ் பந்தைக் கொடுத்தபோது, அவன் தனது வலது கையால் அடிக்கத் தொடங்கினான்.

பிறகு, அவன் இடது கையால் விளையாட ஆரம்பித்தான். இந்த விஷயம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் என் குடும்பத்தில் யாருக்குமே இடது கைப் பழக்கம் இல்லை. கிரிக்கெட் தவிர, அவன் அனைத்து விஷயங்களையும் வலது கையால்தான் செய்கிறான்,” என ராபினின் இடது கைப் பழக்கம் குறித்துப் பகிர்ந்துகொண்டார் பிரான்சிஸ் சேவியர்.

ராபினின் மூத்த சகோதரி கரிஷ்மா மின்ஸ் தற்போது டேராடூனில் விவசாயத்தில் இளங்கலை விவசாயம் படித்து வருகிறார். அதேநேரம் இளைய சகோதரி ரோஷிதா மின்ஜ் 12வது தேர்ச்சி பெற்று நீட் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.

“என் மகன் ராஞ்சியில் இருந்து தனது அணிக்காக விளையாட ராஞ்சி விமான நிலையம் வரும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். அவன் விமான நிலையத்திற்கு வரும்போது, அங்கு போர்டிங் பாஸை நான் வாங்கி சரி பார்க்கும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன்,” என்றார் பிரான்சிஸ்.

ஜார்கண்டில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிழக்கு மண்டல போட்டியில், ராபின் 5 போட்டிகளில் மொத்தம் 3 சதங்கள் அடித்துள்ளார். 2019ஆம் ஆண்டில் விதர்பாவுக்கு எதிராக 133 ரன்கள் எடுத்தது தனது சிறந்த இன்னிங்ஸ் என்றார் ராபின்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களைப் போன்றவர் ராபின்: பயிற்சியாளர்

ராபின்

பட மூலாதாரம்,

ANAND DUTTA

ராபினின் பயிற்சியாளர் ஆசிஃப் ஹக் அன்சாரியின் வீட்டிலும் மக்கள் கூடியுள்ளனர். ஹக் தற்போது நாம்குமில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.

ராபின் ஐபிஎல்லில் தேர்வானது குறித்து பிபிசியிடம் பேசிய அவரது பயிற்சியாளர் ஆசிப், “ஐபிஎல் தொடரில் முதல் வகுப்பு கிரிக்கெட் போட்டிக்கு மட்டும் தேர்வு செய்யப்படுவதில்லை. மும்பை பயிற்சி முகாமில் ராபின் தொடர்ந்து கலந்து கொள்கிறார். மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன்களை போன்று அடித்து ஆடும் சக்தியே அவரது மிகப்பெரிய பலம். ராபினால், ஒரு ஓவரில் 15 முதல் 20 ரன்களை எடுக்க முடியும்," என்றார்.

கிரிக்கெட்டில் ஒரு பழங்குடி வீரர் இந்த நிலையை எட்டுவது ஜார்கண்டின் மற்ற பழங்குடி வீரர்களுக்கும் ஊக்கமளிப்பதாக ஆசிஃப் நம்புகிறார்.

தோனிக்கும் ராபினுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

ராபின்

பட மூலாதாரம்,

ANAND DUTTA

ராபினுக்கும், அவரது முன்னோடியான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

தோனியைப் போலவே ராபினும் ஒரு பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர். தோனியைப் போலவே நீண்ட சிக்ஸர்களை அடிப்பதும் அவரது சிறப்பு. இந்திய கிரிக்கெட் அணியில் தோனி அறிமுகமானபோது, அவர் 12வது பாஸ். ராபினும் 10வது தேர்ச்சிக்குப் பிறகு கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்தினார். மேற்கொண்டு படிப்பைத் தொடரவில்லை.

ராபின் தற்போது ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தில் (JSCA) 23 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடி பயிற்சி எடுத்து வருகிறார்.

“ஏலம் நடந்து கொண்டிருந்தபோது, நான் தன்பாத்தில் இருந்து ராஞ்சிக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தேன். தொடர்ந்து மொபைலை பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏதாவது ஒரு அணி கண்டிப்பாக ராபினை வாங்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருந்தது,” என தன் மாணவரின் வெற்றிக்காகக் காத்திருந்த அவரது பயிற்சியாளர் ஆசிஃப் கூறினார். ராபினின் சக வீரர் குமார் குஷாக்ராவை டெல்லி டேர்டெவில்ஸ் ரூ.7.2 கோடிக்கு வாங்கியுள்ளது.

பிபிசியிடம் பேசிய குஷாக்ரா, “நான் இந்த விலைக்குச் செல்வேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் ஒரு நாள் முன்பு நடந்த மாதிரி ஏலத்தில் என்னைப் பற்றி அதிகம் பேசப்பட்டது. துலீப் கோப்பையில் சிறப்பாக விளையாடிய பிறகு பல அணிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது,” என்றார்.

குஷாக்ராவுக்கு 19 வயது. இவரும் ராபினை போலநஏ ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 13 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதங்களுடன் மொத்தம் 868 ரன்கள் எடுத்துள்ளார். அதேநேரம் லிஸ்ட் ஏ பிரிவில் 23 ஆட்டங்களில் 7 அரைசதங்களுடன் மொத்தம் 700 ரன்கள் குவித்துள்ளார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top