கலாநிதி றவூப் ஸெய்ன்
வாழ்க்கை காலம் என்ற கறையானால் அரிந்துகொண்டிருக்க, இன்னொரு ஆண்டை மிகுந்த சவால்களுடன் எதிர்கொள்ளப் போகின்றோம். பொருளாதாரம் என்ற சதுரங்கப் பலகையில் காய்கள் போல் நகர்த்தப்பட்டு ஒரு checkmate க்கு ஆளாகி பொறியில் சிக்கப்போகிறோம். நாங்கள் போடும் சட்டங்களுக்கு நீங்கள் கட்டப்பட்டே ஆக வேண்டும் .தவறினால் அதற்கும் தண்டனைகள் தயாராக உள்ளது. தொலைத்தொடர்புசேவைகள் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி 42.02% ஆல் ஜனவரி ஒன்றிலிருந்து அதிகரிக்கிறது. Prepaid postpaid ,WiFi data TV அனைத்துவகை data வும் 42 வீதத்தால் அதிகரிக்கிறது.
வரி என்ற ஒரு அந்நியன் நம்மைச்சுற்றி ஒரு இரும்பு வளையத்தை சுழற்றப் போகும் 2024 இல் அதன் தாரதம்மியத்திலிருந்து யாரும் தப்பி இருக்க முடியாது என்றவாறான இறுக்கம் நம்மை மூச்சுத்திணற வைக்கப்போகிறது. 18 வயதான அனைவரும் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தில் தம்மைப் பதிவு செய்து அடையாள அட்டை போன்ற ஒன்றை வைத்திருக்க வேண்டும்.இல்லை என்றால் 50000/- தண்டப்பணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு தனிநபர் குறித்தும் அவர் தம் வருமான மூலங்கள் குறித்தும் ஒரு கழுகுக் கண்பார்வை மக்கள் மீது படர்கிறது.
வருமானத்திற்கு ஏற்ப எல்லோரும் அரசாங்கத்துக்கு வரி செலுத்தும் குடிகளாக மாற வேண்டும். வரி வரி மேல் வரி. வரி மேல் வரி விதித்தால் வங்குரோத்தும் நகரும் என்பதுதான் இப்போது வங்குரோத்து அடைந்த அரசியலாளர்களைப்பாதுகாக்க உள்ள ஒரேவழி என்று அதிகார வர்க்கம் கச்சை கட்டிக்கெண்டு களத்தில் இறங்கியுள்ளது.
அரசாங்கத்தின் போக்கை நியாயமான முறையில் விமர்சிப்பவர்கள் இன்னும் ஒரு நாளில் அதை முடிவுறுத்த வேண்டும். ஜனவரி ஒன்றில் இப்படி ஒரு பத்தி எழுதுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அது எப்படி ? சர்ச்சைக்குரிய online சட்டமூலம் ஜனவரி ஒன்றிலிருந்து அமுலுக்கு வருகிறது. முகநூல் வட்சப் என்பவற்றில் மதநிந்தனை அரச எதிர்ப்பு என்று யாரேனும் எழுதினால் பேசினால் 6 ஆண்டு கால கடூழிய சிறை சொத்துப்பறிப்பு என தண்டனை நமது கழுத்தில் கத்தி வைக்கப்போகிறது.
ஒரு நாட்டின் ஜனாதிபதி தனது குடி மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். ஆறுதல் சொல்ல வேண்டும்.அவர்தான் மக்கள் நல ஜனாதிபதி. நாட்டு நலனில் நம்பிக்கையுள்ள ஜனாதிபதி. துரதிஷ்டம் நாட்டுத்தலைவரே மக்களைப் பயமுறுத்தும் நிலைக்கு வந்துள்ளார். அவர் சொல்கிறார் இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு மிக மோசமானதாக இருக்கும். மக்களுக்கு கஷ்டமானதாகவும் இருக்கும். மக்கள் அதனையும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.
பொறுமையின் எல்லை என்ன? பூமிகூட பொறுமை இழக்கும் போதே பூகம்பம் தோன்றுகிறது.! இறக்குமதியாகும் ஒவ்வொரு பொருளினதும் விலை 22% ஆல் உயரப்போகிறது. சமையல் எரிவாயு மின்சாரம் பெற்றோலியம் அனைத்தினது விலையும் அடுத்த ஆண்டின் முதலாவது கால் ஆண்டிலேயே அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் மொத்தமாகவே முடமாகி வங்குரோத்து நிலையை மத்திய வங்கி பிரகடனம் செய்து அடுத்த சில ஆண்டுகளில்தான் அதன் விகாரமான பக்க விளைவுகளை மக்கள் எதிர்கொள்வது வழக்கம். அதனை from bad to worse என்பார்கள் பொருளியலாளர்கள். துருக்கி ஸிம்பாபே லெபனான் ஆகிய நாடுகளைப் போல் நான்காம் ஐந்தாம் ஆண்டில்தான் மக்கள் பொருளாதார வங்குரோத்து என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.
இப்படி எதிர்வரும் ஆண்டு(2024) கடினாமாகவே இருக்கப்போகிறது. சவால்கள் நிறைந்தது. நாம் நமது குடும்ப/வீட்டுப்பெருளாதாரத்தைக் கவனமாகத் திட்டமிட வேண்டியுள்ளது. ஆடம்பரங்களையும் வீண்விரயங் களையும் குறைக்க வேண்டியுள்ளது. செலவுகளைக்கட்டுபடுத்தி சேமிப்பை பலப்படுத்த வேண்டியுள்ளது . இந்த செய்திகளைத் தான் வரும் ஆண்டு நமக்கு வலியுறுத்தி நிற்கிறது.