இலங்கையில் 2018ஆம் ஆண்டு முதல் தேசிய உர மானியத் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 07 நிறுவனங்களின் வங்கிப் பதிவேடுகளை வரவழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதிக விலைக்கு விற்பனை
விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர்கள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த மோசடி சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட உரங்களை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டியிருந்தாலும், உர செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட பல நிறுவனங்கள் அவற்றை விவசாயிகளுக்கு வழங்காமல் அதிக விலைக்கு வேறு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின்படி, உர செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட 18 நிறுவனங்களில் சுமார் 7 நிறுவனங்கள் இந்த மோசடியை செய்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.