(சாதிக்.எம்.பி)
இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் மிக நீண்ட காலமாக இருந்துவரும் காணிப் பிரச்சினைகளுக்கு பிரதேச செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) அவர்களின் வழிகாட்டலில் துரித கதியில் காணி அனுமதிப்பத்திரம் மற்றும் அளிப்புப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன.
அந்தவகையில் இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு காணி அளிப்புப்பத்திரங்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 2023.11.06 ஆம் திகதி |திங்கட்கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலகக் காணிப் பிரிவின் எற்பாட்டில், காணி உத்தியோகத்தர் என்.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) அவர்களும் ஏனைய விசேட அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். தௌபிக் மற்றும் நிர்வாகக் கிராம உத்தியோகத்தர் எச்.பி.என். யசரட்ண பண்டார ஆகியோரும் கலந்துகொண்டதோடு காணிப் பிரிவின் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டு தாங்கள் பராமரித்துவரும் காணிகளுக்கு அளிப்புப்பத்திரங்களையும், அனுமதிப்பத்திரங்களையும் பெற்றுக்கொண்டனர்.