கலாநிதி. றவூப் ஸெய்ன்
இந்தப்பத்தியை எழுதும் போது இடிபாடுகளின் கீழ் இருந்து மிகுந்த பிரயத்தனத்துடன் தேடி எடுக்கப்பட்ட ஜனாஸாக்கள் மற்றும் குற்றுயிராய்க்கிடந்த சிறுவர்கள் உயிருக்காகப்போராடிக்கொண்டிருந்த அப்பாவி காஸா பெண்களை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் களுக்கு எண்ணெய் இல்லாததால் அவர்களது உடல்கள் புல்டோஸர்களில் அடுக்கிக் கொண்டு செல்லப்படும் காட்சிகள் கண்களில் மிதக்கிறது. இதை டைப் செய்யும்போதே என் கண்கள் பனிக்கின்றன. அறபுத்தலைவர்களின் முகங்களில் காறி உமிழ்ந்து அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் போல் ஓர் உணர்வு மேலிடுகின்றது.
1980 ஜனவரி 26 இல் இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையிலான ராஜதந்திர உறவு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இருநாடுகளிலும் பரஸ்பர தூதுவராலயங்கள் திறக்கப்பட்டன. டெல் அவிவில் தூதுவராலயம்,ஈலாத்தில் (Eilath) கொன்ஸுலேட் என காதல் கால்கோளானது. அது ஹுஸ்னி முபாரக்கின் காலம். இன்று கோமாவில் இருக்கின்றார். பதிலுக்கு இஸ்ரேலியத்தூதரகம் கெய்ரோவிலும் கொன்ஸுலேட் அலெக்ஸாந்திரியாவிலும் திறக்கப்பட்டன. இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையிலான நில எல்லை இரண்டு நகரங்களால் ஆனது. இஸ்ரேலின் தாபா மற்றும் நிட்சானா என்பனவே அவை.
எகிப்தின் வெளிநாட்டுக்கடனின் ஒருபகுதியை அமெரிக்கா ஏற்றதால் ஏற்பட்ட உற்சாகம் முபாரக்கிற்கு இஸ்ரேல் குறித்த பேரன்பையும் பெரும் காதலையும் உருவாக்கியது. இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையிலான ஒரு ஒற்றுமை என்னவெனில் இரண்டும் இராணுவ அரசாங்கங்கள். அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்புத் துறைக்காக பிச்சை வாங்கும் நாடுகள். இதுகாறும் இஸ்ரேல் 4 பில்லியன் டொலர்களை அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு மானியமாகப் பெற்றுவந்தது.
காஸா மீதான ஸியோனிஸ கொலைவெறியாட்டத்தினைத்தொடர்ந்து அந்தத்தொகையை வொஷிங்டன் 14 பில்லியனாக அதிகரித்துள்ளது. எகிப்து இன்னும் இரண்டு பில்லியனைப்பெற்று வருகிறது. எகிப்தின் இராணுவ பாதீடு 7.85 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இஸ்ரேலின் இராணுவப்பாதீடு 21.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.! அந்தச்செஞ்சோற்றுக்கடனுக்காக இஸ்ரேல் சொற்கேட்டு நடக்கும் ஒரு கொவேறு கழுதை போல் முபாரக்கும் இன்று ஸீஸியும் செயல்படுகின்றனர்.
ஆபிரிக்க நிலப்பரப்பில் அமைந்துள்ள போதும் அரசியல் ரீதியில் மத்திய கிழக்கின் மிகப்பெரிய நாடான எகிப்தில் இஸ்லாமிய பெரெழுச்சியோ மாற்றமோ ஜனநாயக உருமாற்றமோ ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்வதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் கண்ணும் கருத்துமாக உள்ளன. அதற்கேற்ற போலித்தலைவர்களை வளர்த்தெடுக்கவும் வளைத்துப்போடவும் எல்லாவகை தந்திரங்களையும் அவை கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக கையாண்டு வருகின்றன. பத்து கோடி மக்களையும் 1000 ஆண்டுப் பழமைவாய்ந்த பல்கலைக்கழக கல்விப் பாரம்பரியத்தையும் நீண்ட வரலாற்று நாகரிக வேர்களையும் கொண்ட எகிப்தில் பண்டைய மம்மிகளையும் பிர்அவ்ன்களையும் மீளுருவாக்கம் செய்வதில் மேலைய சக்திகள் வெற்றிகண்டுள்ளன.
2016 இல் ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி முர்ஸியை கைது செய்து சிறையில் அடைத்து மெதுவாகக் கொல்லும் நஞ்சை ஏற்றி படுகொலை செய்த காட்சியை கச்சிதமாக அரங்கேற்றிய துரோகியே இன்றைய ஸீஸி. அந்த சதிப்புரட்சியைத்திட்டமிட்டு நடாத்திய வர்கள் ஸவுதியும் ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலுமே. தொலைவில் அமெரிக்கா இருந்தது. ஸீஸி அதன் முலம் தலைவராக்கப்பட்டு மதச்சார்பற்ற அந்த இராணுவச் சர்வாதிகாரியிடம் அதிகாரம் கைமாறியது. ஸியோனிஸத்தின் களக்காவலனாக இஸ்ரேல் அவரை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியது. அதற்கான ராஜ விசுவாசத்தையும் வீரவணக்கத்தையும் அவர் இந்த நிமிடம் வரை நிறைவேற்றி வருகிறார்.
இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Binyamin Ben ஒருமுறை " Egypt is not only our closest friend but cooperation between us beyond the strategy" என இந்த உறவின் ஆழத்தை எடுத்துரைக்கிறார். நெடன்யாஹூ சமகால ஹிட்லர் என்றால் அப்துல் பத்தாஹ் ஸீஸி சமகால ஃபிர்அவ்ன் என்று துணிந்து கூறலாம். துரோகம் வெட்கமறியாது என்பதுபோல் ஸீஸீ ஒரு வரலாற்றுத் துரோகி. மக்கள் அபிலாஷை எகிப்தில் முற்றிலும் மாறுபட்டது.2020 இல் நடந்த கருத்துக் கணிப்பில் 85% வீதமான எகிப்தியர்கள் இஸ்ரேலுடனான உறவை வெறுக்கிறார்கள். வெறும் 12 வீதமானவர்களே பரவாயில்லை என்று கருத்தைக் கூறியுள்ளனர்.
2012 இல் சினாய் பாலைவனத்தின் வடக்குப் புறத்தில் இஸ்ரேல் இராணுவம் நிலைகொள்ள அனுமதியளித்த எகிப்து UNOOSA வில் இஸ்ரேல் அங்கத்துவம் பெறுவதற்கு ஐ.நாவில் அதற்கு வாக்களித்த (voting) ஒரேயொரு மத்திய கிழக்கு அறபு நாடு எகிப்து தான். டொனால்ட் ட்றம்பின் காலத்தில் இஸ்ரேல் - எகிப்து உறவு மேலும் பலமடைந்தது. 2022 இல் அமீரகத்தலைவர் முஹம்மத் பின் ஸயாத் அன்நஹ்யானும் ஸீஸியும் இஸ்ரேலைத்தரிசித்தனர்.
முபாரக்கின் காலத்தில் பல பில்லியன் டொலர் பெறுமதியான இயற்கை எரிவாயு இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் அதற்கு இஸ்ரேல் பணம் செலுத்தவில்லை என்று சிவில் சமுகத்தின் விமர்சனங்கள் அங்கு எழுந்தன. நீண்டகாலமாக எகிப்து இஸ்ரேலுக்கு எரிவாயுவை வழங்கிவருகிறது. பிற அறபு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்கின்றன..இந்த இக்கட்டான தருணத்தில் கூட அதை நிறுத்திவைக்க அவர்கள் தயாரில்லை என்பது ஆச்சரியத்துக்குரியதல்ல.
இதுதவிரவும் 117 பொருட்களை இஸ்ரேல் எகிப்துக்கு ஏற்றுமதி செய்கிறது. இஸ்ரேல் தான் மத்திய கிழக்கில் ஏனைய அனைத்து நாடுகளை விடவும் பலமான பொருளாத்ரம். 500 பில்லியன் பெறுமதியான பொருளாதாரம்.இப்படி எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள காதல் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாற்பட்டது. அமெரிக்காவின் தயவு தாட்சண்யமின்றி தனது ராணுவ சர்வதிகாரத்தை நீடிக்க முடியாது ஸீஸிக்கு.
எகிப்தில் இருக்கவேண்டியது இராணுவ சர்வதிகாரமே. அதுதான் அமெரிக்காவுக்கு சௌகர்யமானது. அமெரிக்காவின் சட்டரீதியற்ற குழந்தையான இஸ்ரேல் அமெரிக்காவின் நண்பர் .எகிப்தும் அமெரிக்கச்சினேகிதர். ஆக சினேகிதரின் சினேகிதர் தனக்கும் சினேகிதர் என்பதுதான் ஸீஸியின் அரசியல் வாய்ப்பாடு. இந்த இலட்சணத்தில் றபாஹ் கடவையை பலமுறை மூடிவைத்த ஸீஸீ இந்த முறை திறந்து வைத்திருப்பது அவரது மைத்துனர் நெடன்யாஹுவின் plan c ற்கான பச்சைக்கொடியோ தெரியவில்லை. இன்று அறபு ஸியோனிஸ்டுகளில் முன்வரிசையில் இருப்பது எகிப்தின் ஸீஸீதான். துரோகம் வெட்கமறியாது ஸீஸீ!!