மக்கள் ஆரோக்கியமாக வாழ நம் சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள். அவற்றில் ஒன்றுதான் ஆடுதொடா இலை.
இது ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடுதொடா என அழைக்கப்படுகிறது. இது சில இடங்களில் சிறு செடியாகவும், மற்றும் ஒரு சில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். இது எல்லா இடங்களில் காணப்படும் மூலிகை செடியாகும். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடுதொடா செழித்து வளரும் தன்மை கொண்டது. இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது.
ஆடுதொடா இலையின் வேறு பெயர்கள்
ஆடுதொடா க்கு ஆட்டுசம், வைத்தியமாதா, வாசாதி, வாசை தோடை, சிங்கம், நெடும்பா, ஆடாதோடை போன்ற வேறு பல பெயர்களும் உண்டு.
ஆடுதொடா இலையின் குணம்
இது வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்லும். சிறுநீரை பெருக்கும். கசரோகம் போக்கும். கபத்தை வெளியேற்றும். மூச்சுதிணறலை நீக்கும். ஆஸ்துமாவை குணமாக்கும். கண்வலி போக்கும். வாயு கோளாறுகளை நீக்கும்.
ஆடுதொடா இலையின் மருத்துவ பயன்கள்
நுரையீரலை சுத்தமாக்கும்
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தும் சிறந்த மருந்தாக ஆடுதொடா விளங்குகிறது. இது நுரையீரலில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர்.
சீதபேதி குணமாகும்
சீதபேதியினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஆடுதொடா இலைசாற்றுடன் தேன் கலந்து கொடுக்க சீதபேதி விரைவில் குணமாகும்.
உடல் வலியை போக்கும்
நெஞ்சில் சளி, அதனுடன் உடல்வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடுதொடா இலையைப் காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுத்தால் உடல்வலி பறந்தோடும். அதேபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடுதொடா இலையுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னால் மார்பு வலி குணமாகும்.
ஆஸ்துமாவை குணமாக்கும்
நீண்ட நாட்களாக இருக்கும் சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு இது சிறந்த மருந்தாகும். இதன் இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவிட்டு, பின்பு வடிகட்டி தேன் சேர்த்து கொடுத்து வந்தால் ஆஸ்துமா, இருமல், சுரம் போன்றவை குணமாகும்.
மேலும் இதனுடன் திப்பிலி, ஏலக்காய், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் கலந்து குடிநீரில் கலந்து கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் போன்றவை தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு, ஆஸ்துமா போன்றவை தீரும்.
கழிச்சலை குணமாக்கும்
ஆடுதொடா வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரில் போட்டு காய்ச்சி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி பிரச்சனையை தீர்க்கும்
ஆடுதொடா இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, மஞ்சள் காமாலை போன்றவை குணமாகும். ஆடுதொடா இலையை நிழலில் உலர்த்திப் பொடி போல செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.