கலாநிதி.றவூப் ஸெய்ன்
என்னைக்கொலை செய்தால் அது ஷஹாதத் நாடு கடத்தினால் அது ஹிஜ்ரத்சி றையிலடைத்தால் அது அல்லாஹ்வுனடனான உரையாடல்.
இது இமாம் இப்னு தைமியாவின் வார்த்தைகள். 26790 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பலஸ்தீனை 1920 களிலிருந்து மெதுமெதுவாக விழுங்கிவந்த யூத ஸியோனிஸ்டுகள் இப்போது மேற்குக் கரையின் சுமார் 4000 சதுர கிலோமீட்டர் (மொத்தம் 5655 ச.கி) காஸாவின் 356 ஐயுமே பலஸ்தீனர்களுக்கென விட்டு வைத்துள்ளனர். மேற்குக் கரையில் மென்மேலும் யூத குடியேற்றங்களைத் தொடர்கின்றனர். அது முழுமையாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மஹ்மூத் அப்பாஸும் அவரது ஆயுதப்பிரிவான பத்தாஹும் சோளக்காட்டு பொம்மை போன்று கல்லாய்ச்சமைந்து போயுள்ளனர். எதிர்ப்பு இல்லை என்றால் அகன்ற இஸ்ரேல் எளிதில் சாத்தியமாகிவிடும். ஆக எதிர்ப்பைக் காயடிப்பதுதான் ஸியோனிஸ முன்னுரிமை.
பலஸ்தீனர்களுக்கு முன்னால் உள்ள தெரிவுகள் இரண்டுதான்.ஒன்று ஸியோனிஸ எதிர்ப்பைக் கை விட்டு அமைதியடைவது. இரண்டாவது இறுதி மரணம் வரும் வரை எதிர்த்துப் போராடுவது. முதல் தெரிவின் தவிர்க்கமுடியாத பேராபத்து என்னவெனில் ஸியோனிஸம் படிப்படியாக மேற்குக் கரை காஸா என்பவற்றிலும் யூத குடியேற்றங்களை உருவாக்கி எஞ்சியுள்ள பலஸ்தீனர்களையும் வெளிநாடுகளுக்கு அகதிகளாக விரட்டியடிப்தன் மூலம் ஒரு தூய யூத இன தேசமாக இஸ்ரேலைக்கட்டமைத்துவிடும். ஏனெனில் அதுவே ஸியோனிஸத்தின் கொடுங்கனவு. ஸியோனிஸத்தை எதிர்த்துப்போராடுதல் கடுமையான சவால்.ஆனால் அதன் மூலம் மட்டுமே பலஸ்தீனர்களின் இருப்பையும் நீண்டகாலத்தில் ஒரு சுதந்திர நாட்டுக்கான நிர்ப்பந்தத்தையும் உருவாக்கலாம். இதுதான் அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்தப்பின்புலத்திலேயே எதிர்ப்பை அவர்கள் தெரிவு செய்கிறார்கள்.ஆனால் அது பாரிய சவால் மிக்க தெரிவு. எதிர்ப்பைக்காயடிக்கும் இராணுவ அடையாளமே இஸ்ரேலின் முன்னுரிமை என்ற நிலையில், தற்போதைய போர் இஸ்ரேலுக்கு எத்தகைய பின்னடைவு என்பதும் பலரது ஆய்வைத்தூண்டி வருகிறது. அதாவது பாலஸ்தீனர்களின் எதிர்ப்பு ஸியோனிஸ்டுகள் தமது ஆயுதப்பலம் மற்றும் இராணுவம் குறித்து கொண்டுள்ள அதீத நம்பிக்கையயையும் கற்பனைகளையும் எப்படி உடைத்துச்சரிக்கின்றது என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.
SOAS இன் தொழின்மைசார் ஆய்வுப்பேராசிரியர் Haim Bresheeth Zabnar இப்படி எழுதுகிறார்." ஒக்டோபர் 7 தாக்குதல் இஸ்ரேலின் இராணுவப்பொறிமுறையில் ஏற்படுத்தப்பட்ட பாரிய அதிர்ச்சியாகும். பாலஸ்தீன் நெருக்கடிக்கு இஸ்ரேல் நினைப்பது போன்று இராணுவத்தீர்வு இல்லை என்ற கருத்தை இது மீளவும் வலியுறுத்தியுள்ளது". இன்று களத்தில் இராணுவ ரீதியில் இஸ்ரேல் பின்னடைவையே சந்தித்து வருகிறது. மருத்துவசாலைகளை உணவகங்களை பள்ளிக்கூடங்களை பல்கலைக்கழகங்களை பள்ளிவாயல்களை பாமஸிகளை இஸ்ரேலிய இராணுவம் மூர்க்கமாகத்த தாக்கி அழிப்பது ஒன்றும் இராணுவ வெற்றியல்ல.அல்லது அப்பாவிக் குழந்தைகளையும் போருடன் சம்பந்தப்படாத பெண்கள் பொதுமக்கள் நோயாளிகள் வயதானோரையும் கண்தலை தெரியாமல் கொன்று குவிப்பதும் இராணுவ வெற்றியாகாது.
இஸ்ரேல் ஹமாஸுடன் மட்டும் போரிடாமல் ஏன் இந்த அவமானகரமான அணுகுமுறையைக்கையில் எடுக்கின்றது என்ற கேள்வி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. ஆனால் இஸ்ரேலின் இன்றைய உள்ளக அரசியல் கொந்தளிப்பையும் தெருச்சிக்கல்களையும் நெடன்யாஹுவின் தலைவிதியையும் தெரிந்துவைத்திருப்பவர்களுக்கு இது எந்த ஆச்சரியத்தையும் அளிக்காது. நீண்டகாலமாகப்பதவியில் இருக்கும் நெடன்யாஹூ ஒரு பெரும் ஊழல் பெருச்சாளி. எஹூட் ஒல்மட் போன்று ஆயுள் சிறைத்தண்டனைக்கு தகுதியானவர். நீதித்துறை கடந்த காலங்களில் இவரது ஊழல் குறித்த வழக்குகளில் இவருக்கு எதிரான பல தீர்ப்புக்களை வெளியிட்டு வந்துள்ளது. இறுதித் தீர்மானம் ஒக்டோபரில் வெளிவர இருந்தது.
நெடன்யாஹுவின் ஆட்சி மீது முக்கால் பங்கு மக்கள் கடும் அதிருப்தி கொண்டுள்ளனர். நீதித்துறையை அவரது எண்ணங்களுக்கேற்ப மாற்றியமைக்க முயன்றபோது அவர் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தார். வீதி மறியல் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்தன. வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத அளவு இராணுவத்துறை அதிகாரிகள் அரசாங்க உயர் அதிகாரிகள் mossad ,shabak அதிகாரிகள் என அவருக்கெதிராக எல்லோரும் கிளர்ந்தனர். ஊழல் குற்றச்சாட்டுக்களை நீதி மன்றில் முன்வைத்து பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
நெடன்யாஹூவை அதிகாரத்திருந்து தூக்கி எறிவதற்கு தயாரான இஸ்ரேலியர்கள் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மக்கள் மட்டுமன்றி இராணுவ உயர் அதிகாரிகளும் இந்த மனோநிலையுடன்தான் இருந்தார்கள். இதனால் அவர்கள் ஹமாஸிடம் இருந்து இப்படியொரு தாக்குதலை எண்ணிப்பார்க்கவில்லை. மற்றொன்று 1973 யுத்தத்திற்குப் பின்னரும் அறபு நாடுகளுடனான தனது உறவுகளை சுமூகமயமாக்கியதன் (Normalisation) பின்னரும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு இனி வெளிநாடு ஒன்றுடன் போரிடும் தருணம் ஏற்படாது என்றே எண்ணிக்கொண்டிருந்தது.
எந்த அறபு நாட்டின் ஆதரவுமில்லாத ஹமாஸ் இஸ்ரேலுக்கு ஒரு ஜுஜுபி என்பதே ஸியோனிஸ்டுகளின் நினைப்பு. 2006 இல் இருந்து அவ்வப்போது ஹமாஸ் ஏவுகணைகளை அனுப்புவதும் அதற்கு இஸ்ரேல் பன்மடங்கு பதிலளிப்பதும் வழமையான வாடிக்கை. மற்றப்படி தமது அயன் டோம்களைத்தாண்டி ஒரு குருவி கூட எங்கள் வானில் பறக்காது என்று அகம்பாவம் பேசிவந்தவர்களுக்கு ஒக்டோபர் பேரதிர்ச்சிதான்.
அந்தத்தாக்குதல் சுமார் இரண்டுமணி நேரம் நீடித்தது. இஸ்ரேலினுள்ளே இருபது கிலோமீட்டர் வரை ஹமாஸ் ஊடுருவியது. இராணுவ முகாம்களை முற்றுகையிட்டு ராணுவப் சிப்பாய்களை சுட்டுக்கொன்று 250 பேரளவில் பணயக் கைதிகளாக பிடித்துக்கொண்டு வரும்வரை இஸ்ரேலிய இராணுவத்தால் தம்மை அவசரமாக சுதாகரித்துக்கொள்ள முடியவில்லை. எதிர்த்தாக்குதலுக்கு தயாராக முடியாதளவு அவர்கள்அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். யாருடைய கையிலும் ஒரு rifle கூட இருக்கவில்லை அவர்களில் பெரும்பாலானவர்கள் கீழாடையுடன் அங்காங்கே திரிந்திருக்கிறார்கள் என்கிறார் sabnar. ஆக இந்த அதிர்ச்சியிலிருந்து இன்று இராணுவம் மீண்டிருக்கலாம்.ஆனால் மக்கள் மீளவில்லை. இஸ்ரேலின் இராணுவமோ தமது உளவுப்பிரிவோ தோற்றுவிட்டது.அவற்றின் மீது இனி நம்பிக்கை கொள்ள முடியாது என்பதே மக்களின் உளவியலாகிவிட்டது.அதனால்தான் இன்றுவரை நான்கு இலட்சம் யூதர்கள் நாட்டை விட்டுத்தப்பியோடியுள்ளனர்.
தனது இராணுவத் தோல்விகளையும் ஒக்டோபர் அதிர்ச்சியையும் சரிசெய்யவும் மூடி மறைக்கவும் இராணுவ நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பவமே இப்போது நெடன்யாஹூ எத்தனிக்கிறார். அதற்காகவே அப்பாவி பாலஸ்தீனர்களைக்கொன்று குவிக்கிறார். பல சோடனைகள் பொய்கள் புரட்டுகள் நாடகங்கள் என அவரது அரசியல் எதிர்காலத்தைக்காப்பாற்றவும் சிறைத்தண்டனையைத்தவிர்க்கவும் பகீரதப்பிரயத்தனம் செய்கிறார்.ஆனால் அவர் வெற்றி பெறப்போவதில்லை .தோல்வி ஏலவே அவரது தோளில் சுமத்தப்பட்டு விட்டது.!!