நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது.
இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் மற்றும் முதியோர் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் இந்தியாவில் பரவி வரும் சூழலில், இதனை தடுக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் : இந்த நிலையில், புதுச்சேரியில் பொது இடங்களில் கட்டாயமாக முக கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தும்மல் மற்றும் இருமல் இருந்தால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு அறிவுறுத்தியுள்ளார். காய்ச்சல், தும்மல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை அணுகவும் நெரிசலான இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்குமாறும் சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.