இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமையத்தின் உச்சி மாநாடு அரசியல் முக்கியத்துவமற்ற ஒரு கூடிக் கலைதல் மட்டுமா?

Dsa
0

 



கலாநிதி.றவூப்ஸெய்ன்

காஸா இனப்படுகொலை மற்றும் இனச்சம்ஹாரம் குறித்து ஆராய்ந்து உடனடித் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு நேற்றைய தினம் ஒன்றுகூடிய இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமையமும் அறபு லீக்கும் எந்த உருப்படியான தீர்மானமும் இல்லாமலேயே கலைந்து சென்றுள்ளமை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. காரணம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அரசியல் ராஜதந்திர நோக்கம் கொண்ட நாடுகள் கூடி ஒரேவகைப்பட்ட தீர்மானத்தை அவை எடுக்க வாய்ப்பில்லை.


காஸா எரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் படுகொலை 12 000 ஐ நெருங்குகின்றது. 35 நாட்களின் பின்னரே இந்நாடுகள் கூடியமை அவற்றின் இயலாமையையும் கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்துகின்றது. ஒரு சம்பிரதாயத்துக்கும் சடங்குக்குமே அவை ஒன்றுகூடின. ஸவூதி அறேபியாவே இப்போது அறபு லீக் ற்குத்தலைமை வகிக்கின்றது. அதை பயங்கரமான பொறியில் மாட்டி ஆட்டிப்படைக்கும் வொஷிங்டனும் வொஷிங்கடனின் உற்ற தோழன் இஸ்ரேலும் றியாதை வைத்தே காய் நகர்த்தி வரும் நிலையில் அறபு நாடுகளின் கூட்டமைப்போ இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்போ உச்சிமாநாட்டில் எதையும் சாதிக்கபபோவதில்லை.


ஒரு மாதத்திற்கு முன்னரே இது நடந்திருக்க வேண்டும். இஸ்ரேலும் அமெரிக்காவும் அதனை நடாத்தாமல் ரியாத் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தது. உண்மையில் இன்று தேவையானது உடனடி நடவடிக்கை. போரை அவசரமாக நிறுத்த வேண்டும். காஸாவுக்கான மனிதாபிமான கொரிடோரை விசாலப் படுத்த வேண்டும். நீண்ட காலத் தீர்வான 1967 எல்லையுடன் கூடிய சுதந்திர ஃபலஸ்தீன் பற்றிய பேச்சுவார்த்தைகளை முடுக்கி விட வேண்டும். இதை விடுத்து வெறும் கண்டன வார்த்தைகளோடு அனைத்தையும் சுருக்கிக் கொண்டார்கள் அவர்கள்.


இஸ்ரேலை வாழவைக்கும் சவூதி.  ஐக்கிய அரபு அமீரகம் ஜோர்தான் மற்றும் எகிப்து  என்பனவும் இங்கே உள்ளன.அவை எப்படி இஸ்ரேலுக்கு எதிராகத் தீர்மானம் எடுக்கும்? இஸ்ரேலுக்கு எதிராக சவூதி பெற்றோலியத்தை ஓர் ஆயுதமாகக் பயன்படுத்த மாட்டாது என்று மிகக்காட்டமாக தெரிவித்துள்ளார் முஹம்மத் பின் ஸல்மான். ஈரானிய ஜனாதிபதி இந்தப்பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தளங்கள் ஊடாகவே இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் தொடர்ச்சியாக வினியோகிக்கப்படுவதால் அமெரிக்க தளங்களை அறபு நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இஸ்ரேலையும் அமெரிக்காவையும் துப்புவதா விழுங்குவதா என்ற திரிசங்கு நிலையிலுள்ள அராபிய மன்னர்கள் ஒருபோதும் இஸ்ரேலை எதிர்த்து எந்தத்தீர்மானத்தையும் எடுக்கப்போவதில்லை என்பதை இந்த உச்சிமாநாட்டில் உறுதி செய்துள்ளனர்.


முஸ்லிம் உம்மாவின் எதிர்பார்ப்பையும் அபிலாஷையையும் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு தமது இருப்பை மட்டும் இலக்காகக் கொண்டு காய்நகர்த்தும் அரேபிய ஆட்சியாளர்கள் குறிப்பாக மேலே குறிப்பிட்ட நான்கு நாடுகளும் இஸ்ரேலைப்பகைப்பது தமது எஜமானரான அமெரிக்காவைப் பதைப்பதாகும் என்பதைத் தெளிவாக விளங்கி வைத்துள்ளன. ஆதலால் இவர்கள் கூடாமலேயே இருந்திருக்கலாம். குறைந்த பட்சம் இவர்கள் இஸ்ரேலில் கொண்டுள்ள தனிப்பட்ட செல்வாக்கைப்பயன்படுத்தியேனும் காஸா மக்கள் மீதான இனப்படுகொலையை ஆவது தடுத்து நிறுத்தியிருக்கலாம்.


எண்ணெய் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துகின்றோம் என்று ஓர் அச்சுறுத்தலையேனும் விடுத்திருக்கலாம். அல்லது தமது எஜமானர்கள் அறியாவண்ணமேனும் பலஸ்தீனர்களுக்கு உதவியிருக்கலாம். எதுவுமே செய்யாமல் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் பச்சை பச்சையாக ஆதரிக்கும் இந்த அதிகார வர்க்கத்தின் மனோபாவம் மிகவும் குரூரமானது. குமட்டலைத்தரக்கூடியது. கோபத்தைக் கொப்பளிக்க வைக்கக்கூடியது. நேர்மையான முஸ்லிம் அல்லாத நாடுகளுக்கு உள்ள மனிதாபிமானத்தின் நூறில் ஒன்று கூட இவர்களுக்கு இல்லை என்பது மிகுந்த அவமானகரமான து. இழிவானது. 


இன்று தென்னாபிரிக்கா மிக தைரியமாகவும் வெளிப்படையாகவும் நெடன்யாஹூ என்ற போர்க்குற்றவாளியை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உடனடியாக கைது வேண்டும் என்று கோரியுள்ளது.இப்படிக்கோருவதற்கு கூட ஒரு முஸ்லிம் நாட்டுத்தலைவருக்கு தில் இல்லை என்றால் இவர்கள் யார்? இவர்கள் இவ்வளவு கோழைகளாய் ஏன் இருக்கிறார்கள்? இவர்கள் யாருக்கு அஞ்சுகிறார்கள்? இவர்களை அமைதிப்படுத்தியுள்ள காரணி எது என்ற பல கேள்விகளை இது எழுப்புகின்றது. அர்தூகான் கூட அமைதியாக இருப்பதாகவே எனக்குத்தோன்றுகிறது.பல லத்தீன் அமெரிக்க நாடுகள் இஸ்ரேலுடனான தமது ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டுள்ளது.


ஆனால் அருகிலுள்ள அறபு நாடுகள் இஸ்ரேலை இன்னும் விசுவாசமிக்க நண்பனாகவும் காதலனாகவுமே நடாத்துவதை என்னவென்று நாம் வர்ணிப்பது?. இந்தப்போர் எமது நட்பை பாதித்துவிடாது என்று இன்றைய தினம் ஐக்கிய அறபு அமீரகம் அறிவித்துள்ளது.அப்படியானால் எதற்கு உச்சி மாநாடு? காஸா மட்டும்தான் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லை முழு அறபுலகமும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை இப்போதுதான் புரிந்து கொள்கிறேன் என்ற பலஸ்தீனரின் வார்த்தை எத்துணை உண்மை என்பதை மீளவும் ஒருமுறை அறபு களைக்கூத்தாடிகளின் காட்டுதர்பார் நிரூபித்துள்ளது.


வரலாறு கோழைகளையும் துரோகிகளையும் வாழவைத்த வரலாறில்லை. இந்தப்பாடத்தை நிச்சயம் ஒருநாள் இன்றுள்ள மீசை வைத்த அரேபிய பெட்டை மன்னர்களும் இராணுவ சர்வதிகாரிகளும் அறிந்தே ஆகுவார்கள்

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top