கலாநிதி. றவூப்ஸெய்ன்
பாடசாலைகளே ஒரு சமூகத்திலுள்ள நிறுவனங்களில் முதன்மையானது. அந்த சமூகத்தின் எதிர்பார்ப்பைச் சுமந்தது.அதன் மூளையாக செயல்படுபவரே அதிபர். முன்னொரு காலத்தில் இருந்த அதிபர் அல்லர் இன்றைய அதிபர். அவரது பங்கும் பணியும் பன்முகமானவை. நிலைமாற்று வகிபாகங்களை அவர் நேர்த்தியாக ஆற்றவேண்டியுள்ளது.நிருவாகப்பணி ஒருபுறம் முகாமைத்துவப் பணி மறுபுறம். கல்விசார் பங்கு இன்னொரு புறம்.தலைமைத்துவ வகிபாகம் மற்றொருபுறம்.
இத்தனைக்குமான அறிவு திறன்கள் மனப்பாங்குகள் ஆளுமைப்பண்புகள் தொழின்மைசார் அணுகுமுறைகள் அவரிடம் கைகூடினால் மட்டுமே மேலே சொன்னதெல்லாம் சாத்தியமாகும். கடதாசி தகுதி மட்டுமே இவற்றை நமக்குத்தருவதில்லை என்பதால் இவற்றை வளர்க்க நாம் முற்படவேண்டும். ஓர் அதிபரின் முழுமுதற் கவனமும் மாணவர்களின் கல்வி அடைவிலும் ஒழுக்க வளர்ச்சியிலும் குவிய வேண்டும். இது அவரது முதற் பங்கு.
இரண்டாவது கற்றல் கற்பித்தலுக்கான சூழலை உறுதி செய்தல். வகுப்பறையை கற்றலுக்குச்சாதகமானதாய் மாற்றியமைப்பது இதன் அடிப்படையாகவுள்ளது.
மூன்றாவது, இரண்டாம் நிலை அணியினரிடையே தலைமைத்துவத்தை வ அதாவது ஆசிரியர்கள் மத்தியில் தலைமைத்துவப் பண்புகளை திட்டமிட்டு வளர்க்க வேண்டும்.
நான்காவது கற்பித்தல் மற்றும் போதனை முறைகளை மேம்படுத்துவதில் கூடிய அக்கறை காட்டல். கல்வித்தொழில்நுட்பத்தை அதிகபட்சம் பிரயோகிக்க வகை செய்தல் வேண்டும்.
இறுதியாக பாடசாலைக்கு வெளியிலுள்ள பெற்றோர் பழைய மாணவர் போன்ற பலங்களை முறையாகக் கையாண்டு கல்வி செயற்பாடுகளை துரிதமாக மேம்படுத்தல். ஜனநாயக அணுகுமுறையை இவ்விடயத்தில் கையாளல் என்பனவும் முக்கியமானவை.
வெளிப்பகட்டு,போலிப்பிரமைகள், படம் காட்டுதல்கள் , அதிகாரத்தோரணைகள் என்பவற்றைத்தவிர்த்து good staffing என்ற பண்புடன் செயல்படவேண்டும். கலந்தோலோசனை ஓர் ஈமானியப்பண்பு அதைப்பின்பற்ற வேண்டும். சமீபத்தில் ஒரு தேசிய பாடசாலைக்கு பெரும் மக்கள் எதிர்பார்ப்புடன் வந்த அதிபர் ஏற்கனவே மிகச்சிறப்பாக இருந்த காரியாலயத்தை திருத்தியமைக்க 1.5 மில்லியனைச்செலவு செய்து வருவதாக அறிந்தேன். இது முன்னுரிமைக்குரியதல்ல. வெளிப்பகட்டை விட மாணவர்களின் உயர் ஆளுமையை வளர்த்தெடுக்க முழுமூச்சாக செயல்படவேண்டியுள்ளது. அதுவே இன்றைய பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.