மணத்தக்காளியின் மருத்துவ குணங்கள்

 

 



வெப்பம் காரணமாக எவ்வித நோய்களும் நம் உடலுக்கு ஏற்படாமல் மணத்தக்காளி பாதுகாப்பு அளிக்கும். தனது குளிர்ச்சித் தன்மையால் வெப்ப நோய்களைத் தடுக்கும்.கிராமங்களில் வளர்ந்த சிறுவர்கள் மணத்தக்காளியின் பழங்களை சாப்பிட்டிருப்பார்கள். மணத்தக்காளியின் பழங்களை முகத்தில் பூசி விளையாடுவதும், அப்படியே சாப்பிடுவதும் சிறுவர் சிறுமிகளின் உடல் வெப்பத்தை அவர்களுக்கே தெரியாமல் குறைக்கும்.


வயிற்றிலும் குடற்பகுதியிலும் உண்டாகும் புண்களைக் குணப்படுத்தும் திறன் மணத்தக்காளியிடம் உண்டு. வாய்ப்புண் ஏற்பட்டதுமே கிராமங்களில் தேடப்படும் முதல் மூலிகை மணத்தக்காளி தான். இதன் கீரை மற்றும் பழங்கள் இரண்டுக்கும் வயிற்றுப் புண்களை குணமாக்கும் சக்தி இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


மருத்துவ வற்றல்:


மணத்தக்காளி பழங்களை நன்றாக உலர வைத்து வற்றலாகப் பயன்படுத்தலாம். நீண்டநாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் வற்றல் சிறந்த மருந்து. பசியை அதிகரித்து உடலுக்கு போஷாக்கை வழங்கும். காய்ச்சல் காரணமாக நாவில் ஏற்படும் கசப்பு மற்றும் வேறு காரணங்களால் ஏற்படும் வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தும் உணவுப் பொருளாகவும் மணத்தக்காளி வற்றலைப் பயன்படுத்தலாம்.


நுரையீரல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கவும் இதன் வற்றல் பயன்படுகிறது. சிறுநீர் பெருக்கை அதிகரித்து, சிறுநீர்ப்பாதை தொடர்பான நோய்களையும் குணமாக்கும். வற்றலை லேசாக நெய்யில் வதக்கிய பின்பு பயன்படுத்தலாம்.


புண் போக்கும் சாறு:


வாய்ப்புண் இருக்கிறதா? மணத்தக்காளி இலையைப் பிழிந்து சாறு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க, வாய்ப்புண் மறையும். இதை வாய்க் கொப்பளிக்கும் நீராகவும் வாய்ப்புண் இருப்பவர்கள் பயன்படுத்தலாம்.


பருப்புக் கடைசல்:


மணத்தக்காளி இலைகளோடு பருப்பு சேர்த்து கடைந்து, அதன் வற்றலையும் துணைக்குச் சேர்த்து ’மணத்தக்காளி பருப்புக் கடைசல்’ சமைக்கலாம். வயிற்றுப் புண், ரத்தக்குறைவு, உடல்சோர்வு போன்றவற்றை நீக்கும் மருந்தாக இந்தப் பருப்புக் கடைசல் பயன்படும். நோய் நீக்குவது மட்டுமன்றி சுவையாகவும் இருக்கும். உடல் ஊட்டம் குறைந்த குழந்தைகளுக்கான ஊட்ட உணவாகவும் இதை உபயோகிக்கலாம்.


மணத்தக்காளி கீரையுடன் பசலைக்கீரை சேர்த்து சமைத்து சாப்பிடுவது, வேனிற்கால நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த உணவு. மணத்தக்காளியை கீரையாகப் பயன்படுத்த, சளி, இருமல் போன்ற கப நோய்களும் விலகும் என்கிறது சித்த மருத்துவம். மணத்தக்காளி செடியை அரைத்து நீரிலிட்டுக் காய்ச்சி, அந்த நீரைக்கொண்டு புண்களைக் கழுவலாம்.


பசியைத் தூண்டும்


நோய் வராமல் தடுக்கவும், நோய் ஏற்பட்டாலும் அதைப் போக்கும் வல்லமையும் மணத்தக்காளிக்கு உண்டு. தாகத்தை தணிக்க மணத்தக்காளி பழம் உதவும். உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கவும், மலத்தை இளக்கவும், பசியைத் தூண்டவும் மணத்தக்காளி பழத்தைப் பயன்படுத்தலாம். மணத்தக்காளி காரக்குழம்பை ருசித்துப் பாருங்கள், மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும்.


இவ்வளவு பலன்கள் நிறைந்த மணத்தக்காளி எளிதாக வளரும். பழங்களைப் பிசைந்து விதைகளைத் தூவி தொட்டிகளில்கூட வளர்க்கலாம். ஒரு மழை பெய்தால் போதும், விதைப்பரவல் மூலம் ஏற்கெனவே மண்ணில் புதைந்து கிடக்கும் மணத்தக்காளியின் ஆதாரம் முளைக்கத் தொடங்கிவிடும். மணத்தக்காளி போன்றே உருவ அமைப்புடைய சில செடிகள் சாப்பிட உகந்தவையல்ல. மணத்தக்காளி தானா என்று உறுதிப்படுத்திக் கொண்டு பயன்படுத்துங்கள்.


தாவரவியல் பெயர்:


Solanum nigrum


குடும்பம்:


Solanaceae


கண்டறிதல்:


சற்று அடர்ந்த பச்சைநிற இலைகளைக் கொண்ட செடி வகையைச் சார்ந்தது. மெல்லிய தண்டு அமைப்புடன், சிறுசிறு வெள்ளை நிறப் பூக்கள் இருக்கும். கருமை நிறத்தில் உருண்டையான சிறு பழங்களைக் கொண்டது. பழுக்காத காய்களை உட்கொள்வது நல்லதல்ல.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section