கோப் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார கண்டி கிரிக்கெட் கெம்பஸ் திட்டத்தின் ஆலோசகராக பணியாற்றியுள்ளதால், முரண்பாடுகளுக்கு மத்தியில் அவரால் கோப் குழுவின் தலைவராக தொடர்ந்தும் நீடிக்க முடியாது என்றும், இலங்கை கிரிக்கட் நிறூவனம் தொடர்பான விசாரணைகளின் போது, இவ்வாறான முரண்பாட்டை வெளிப்படுத்தாமல் கோப் குழுவின் தலைவராக செயற்பட முடியுமா என்பதில் பிரச்சினை நிலவுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் Brain Center ஐ நிறுவும் வேலைத்திட்டத்திற்கு Business Management School of Colombo நிறுவகம் ஆலோசக முகவராக நியமிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிறுவனத்தின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித் பண்டார அவர்களே செயற்படுவதாகவும், இது பாரிய பிரச்சினைக்குரிய விடயம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்
எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் பாராளுமன்றத்தில், இதுபோன்ற முரண்பாடுகள் ஏற்படும் போது, பாராளுமன்ற குழுக்களில் பதவி வகிக்க முடியாது என்றும், இது இவ்வாறு இருக்கும் போது அவர் எவ்வாறு கோப் குழுவின் தலைவராக செயற்பட முடியும் என்பது பிரச்சினைக்குரிய விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
தனிப்பட்ட விடயங்கள் குறித்த பேசுவதற்கு தான் விருப்பம் இல்லாவிடினும், அரச நிதிக்குழுவில் நாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட எனக்கு, வருகை தர முடியும், கருத்துத் தெரிவிக்க முடியாது என கூறி எதிர்க்கட்சித் தலைவராக கூட பேச முடியாதவாறு வாக்கெடுப்பு நடத்தி வாயை அடைத்தாலும், கோப் குழுவில் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார அமர்ந்துள்ளார் என்றும், இதனால் தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கோப் குழு தலைவரின் மகன், கோப் குழுவில் அமரும் வரை பாராளுமன்ற அதிகாரிகளே நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னவென பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவெனவும் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவர் கூட கோப் குழுவில் அமர்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கோப் குழு அதிகாரியாக இல்லாத இவர் எவ்வாறு வந்து அமர்ந்தார் என்பதுதான் பிரச்சினைக்குரிய விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.
இங்கு சட்டம் பாரியளவில் மீறப்பட்டுள்ளதாகவும், கோப் குழுவின் தலைவராக செயற்படுவதற்கு தகுதியில்லை என்றும், சகல ஆதரங்களுடனுமே தாம் பேசுவதாகவும் எதிரக்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கோப் குழுவின் நடவடிக்கைகள் குறித்து இன்று (16) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எனவே பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவுக்கு கோப் குழுவின் தலைவராக இருக்க தார்மீக உரிமை இல்லை என்றும், இவ்வாறான கேலிக்கூத்தான செயல்களை செய்யக்கூடாது எனவும், இது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.