போட்டியின் இறுதி ஓவரில் ஆறு பந்துகளுக்கும் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தமது அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார் அவுஸ்திரேலியக் கிரிக்கெட் வீரர் ஒருவர்.
கோல்டு கோஸ்ட் மூன்றாம் நிலை லீக் போட்டிகளில் விளையாடிவரும் மட்ஜரபா அணியின் தலைவர் கேரத் மோர்கனே இந்த வியக்க வைக்கும் சாதனைக்குச் சொந்தக்காரராவார்.
கடந்த சனிக்கிழமை சர்ஃபர்ஸ் பேரடைஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் அரிதினும் அரிதான இச்சாதனையை நிகழ்த்தினார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய மட்ஜரபா அணி 177 ஓட்டங்களை பெற்றுக்ெகாண்டது..
இரண்டாவதாகப் துடுப்பெடுத்தாடிய சர்ஃபர்ஸ் அணிக்கு இறுதி ஓவரில் ஐந்து ஓட்டங்களே தேவைப்பட்டன. அவர்கள் கைவசம் ஆறு விக்கெட்டுகளும் இருந்தன.
ஆகையால், மட்ஜரபா அணி தோற்கப்போவது உறுதி என்ற நிலையில்தான், மோர்கன் இந்த மாயத்தை நிகழ்த்தினார்.
சர்ஃபர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேக் கார்லண்ட் 65 ஓட்டங்களை எடுத்த நிலையில், மோர்கன் வீசிய இறுதி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஐவரும் ஓட்டமெடுக்காமலேயே ஓய்வறை திரும்பினர்.
தன்னாலேயே இதனை நம்ப முடியவில்லை என்று சொன்னார் மோர்கன்.
முதல் நான்கு பந்துகளை எதிர்கொண்ட நால்வரும் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த இருவரும் ‘போல்ட்’ முறையில் வெளியேறினர்.
இதற்குமுன் நியூசிலாந்தின் நீல் வேக்னர் (2011), பங்ளாதேஷின் அல் அமீன் ஹொசைன் (2013), இந்தியாவின் அபிமன்யு மிதுன் (2019) ஆகியோர் ஒரே ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது.