ஆசிரியர்களின் பன்முக வகிபாகங்கள் 03

 


கலாநிதி.

றவூப்ஸெய்ன்

கல்வியியலாளர்களின் கருத்தில் 1930 களிலிருந்து 1950 கள் வரை ஆசிரியர்கள் செய்த மிகப்பிரதான பணி;பாடப்புத்தகங்களிலிருந்து தரவுகளையும் தகவல்களையும் போதித்தல் மூலம் மாணவர்களின் மூளைக்கு இடமாற்றம் செய்வதாகவே பெரும்பாலும் இருந்தது. இதனை இடமாற்றப்பணி (Transformational role) எனலாம். பிந்திய தசாப்தங்களில் (1950 முதல் 1990 கள் வரை) ஆசிரியர் வகிபாகம் இருவழிப்பாதையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆசிரியர் அப்போது மாணவர்களின் கற்றலுக்கு வசதி செய்பவராகவும் மாணவர்களிடமிருந்து கற்பவராகவும் இருந்தார். இதனை கொடுக்கல் வாங்கல் வகிபாகம் ( Transactional role ) எனலாம். கற்பிக்கும் அதேவேளை மாணவர்களிடமிருந்து கற்பவராகவும் அவர் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


1990 களில் உலகில் ஏற்பட்ட பல்வேறு வளர்ச்சி நிலைகள் கல்விப் புலத்தையும் வெகுவாகப் பாதித்தது. விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஒருபுறம் மனித குலத்தை பிரமிக்கச்செய்தது.மறுபுறம் அதன் எதிர்மறையான தாக்கங்களும் ஒட்டிக்கொண்டு வந்ததை தவிர்க்க முடியாமல் போயிற்று. பூகோள வெப்பம். காலநிலை மாற்றம், இருப்பவர்களுக்கும் இல்லாதோருக்கும் இடையிலான இடைவெளி, பண்பாட்டுப் பின்னடைவு.தலைமைத்துவ இடைவெளி, ஆன்மீக வறுமை, ஆயுதப் போட்டி என்று ஒவ்வொன்றாக உலகம் பாரிய அறைகூவல்களுக்கு முகங்கொடுக்கத் தொடங்கியபோது கல்வி முறைமைலும் (System)உள்ளடக்கத்திலும் (Curriculum)மாற்றங்கள் வர வேண்டும் என்ற கோஷம் வலுத்தது.


ஆக, 1990 களுக்குப் பிந்திய கடந்த மூன்று தசாப்தங்களில் ஆசிரியரின் இந்தப்பங்கு மாற்றமடைய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்றைய ஆசிரியர்களின் வகிபாகம் நிலைமாற்று வகிபாகம் (Transitional role) என உருமாறியது. அவை பன்முக மானவை.இருக்கும் நிலையிலிருந்து இன்னோர் நன்நிலைக்கு மனித குலத்தை உந்தித்தள்ளவேண்டியவை. ஒட்டுமொத்த மனித குலத்தினதும் அறம் ஆன்மீகம் பொருளாதாரம் என எல்லாத்தளங்களிலும் நேர்ப்பாங்கான மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டுவர வேண்டியவை என்ற கருத்து இன்று அழுத்தமாக பேசப்படுகின்றது.


Google தேடு பொறியில் நல்லாசிரியர் (Good teacher),வினைத்திறன் மிக்க ஆசிரியர் (Effective teacher), நேர்ப்பாங்கான ஆசிரியர் ( Possitive teacher) என்ற அடைமொழிகளுடன் கூடிய 1 கோடியே 70 இலட்சம் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இரண்டு அமெரிக்க பல்கலைப் பேராசிரியர்கள் இவற்றை வகை பிரித்து பெரும் நூல்களை எழுதியுள்ளனர். உலகிலுள்ள வாண்மைத்தொழில்களில் அல்லது  தொழில்வாண்மைகளில் (இலங்கையில் இன்னும் முழு வாண்மையாக அது மாறவில்லை)ஆசிரியத்துவம் போன்ற மற்றொன்றில்லை  என்பதே இதன் உள்ளர்த்தம்.


இத்தகைய ஆசிரியர் நிலைமாற்று வகிபாகங்கள் ஊடே ஒரு மாணவனுக்கு வழங்க வேண்டிய நான்கு அருங்கொடைகள் உள்ளன. முதலாவது தரமான கல்வி (Quality education) இரண்டாவது உயர்ந்த ஒழுக்கம் (Moral values), மூன்றாவது ஆன்மீகப் பெறுமானங்கள் (Spiritual values) நான்காவது ஒழுங்குக்கட்டுப்பாடு ( Discipline). இவற்றை வழங்க ஆசிரியர்களிடம் என்ன இருக்க வேண்டும் என்பதை கடந்த பத்தியில் பார்த்தோம். அதில் ஆசிரியரிடம் இருக்கவேண்டிய அறிவுப்பின்புலத்தின் பரப்பெல்லை (Scope) குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section