காஷ்மீர் கறுப்பு தினம் : ஐ.நா. காரியாலய முன்றலில் போராடிய காஸ்மீர் விடுதலைக்கான அமைப்பு !

Dsa
0

 


நூருல் ஹுதா உமர்


காஸ்மீர் விடுதலைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் கஸ்மீர் கருப்பு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்தின் முன்னாலும், இலங்கைக்கான இந்திய உயஸ்தானிகராலய முன்றலிலும் இன்று சனிக்கிழமை (05) பதாதைகளை ஏந்திக்கொண்டு காஸ்மீர் விடுதலைக்கான அமைப்பினர் கொழும்பு மாநகர சபை ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் சார்பிலான மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஸம்மில் ஆகியோரின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.



ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெறும் அட்டூழியங்களையும், ஆக்கிரமிப்புப் படைகள் அப்பாவி காஷ்மீரிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதையும் இவர்கள் தமது பதாதைகளில் சுட்டிக் காட்டியிருந்தனர். ஜக்கிய நாடுகள் சபையும் ஜ.நா. மனித உரிமை அமைப்பும் இவ்விடயத்தில் தலையிட்டு இரு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்து வைக்க வேண்டும். சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயமான போராட்டத்திற்க்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதுடன் காஷ்மீர் மக்களின் நிரந்தர துயரங்களை நோக்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப காஷ்மீர் பிரச்சனைக்கு ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் அடிப்படையில் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை வலியுறுத்துவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.



கடந்த ஏழு தசாப்தங்களாக ஆக்கிரமிப்புப் படைகள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரில் செய்த மனித உரிமை மீறல்களை கண்டித்த அவர்கள் காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப காஷ்மீரில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய உலக நாடுகளும்  கடமைப்பட்டுள்ளது என மேலும் குறிப்பிட்டனர்.



ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், இந்தியா முற்போக்கான சிந்தனையுடன் செயற்பட வேண்டும். இலங்கை அரசாங்கத்திற்கு ஜனநாயகத்தை கற்றுக் கொடுப்பது போன்று எண்ணி வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்தியா தனது மக்கள் 40 வருடங்களாக காஸ்மீரில் படும் இன்னல்களுக்கு ஜனநாயத்தை அமுல்படுத்த தயங்குவது ஏன்?  மனிதாபிமானமில்லாத அடக்குமுறையை உலகில் சந்திக்கும் இடங்களான காஸ்மீரின் விடுதலைக்கும், பலஸ்தீன விடுதலைக்கும் நாங்கள் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றோம். இனவாதத்தை விதைத்தோரே உலக பூகோள அரசியலில் இனவாத கோரமுகங்களின் பாதிப்புக்களை சந்தித்து வருவதை நாம் காணலாம் என்றார்

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top