இறக்காமம் - மாணிக்கமடு பிரதேசத்தில் மோட்டார் சைக்கலில் பயணித்த இருவர் மீது போக்குவரத்துப் பொலீசார் துப்பாக்கிச் சூடு

Dsa
0

 




கறுப்பு ஜூலை தினத்தில் 

வெறுப்புமிகு துப்பாக்கிச் சூடு 


S.M.Z.சித்தீக் 


நேற்று (23.07.2023) ஆம்  திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 03.30 மணி அளவில் இறக்காமம்  பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட மாணிக்கமடு பிரதேசத்தில்  மோட்டார் சைக்கலில் பயணித்த இரு நபர்கள் மீது அம்பாறைப் பிரதேச போக்குவரத்துப் பொலீசார் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு ஒன்றை நிகழ்த்தி உள்ளார்கள்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்ததனால் இறக்காமம் 7ஆம்  பிரிவில் அமைந்துள்ள குடுவில் எனும் கிராமத்திற்கு விருந்து ஒன்றுக்காக சென்று ஊர் திரும்பிய வேளையில் மாணிக்கமடு பாலத்திற்கு அருகாமையில் வளைந்த வீதி ஒன்று காணப்படுகின்றது. குறித்த அந்த வளைந்த வீதிக்கு அண்மித்து பகுதியில் கடமையின் நிமித்தம் நின்ற நான்கு போக்குவரத்து பொலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களையும் நிறுத்தியதாகவும் அவர்கள் பொலீசார் நிறுத்தியதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்தும் பயணித்ததாகவும் அவர்களை நிறுத்துவதற்காக மோட்டார் சைக்கிளின் டயர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலீசார் கதை கூறுகிறார்கள்.


பொலீசார் மறைவில் நின்றதனால் எங்களை நிறுத்தியது எங்களுக்கு விளங்கவில்லை. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் பயத்தில் தொடர்ந்தும் பயணித்ததாகவும் சிறிது நேரத்தில் முழங்காலுக்கு கீழே காயம் ஏற்பட்டு உதிரம் கொட்டுவதாகவும் உணர்ந்தேன் என மோட்டார் சைக்கலின் பின்புறம் அமர்ந்திருந்து சம்பவத்தில் காயம் அடைந்த   அப்துல் ரஹ்மான் நிப்றாஸ் (29 வயது) என்பவர் தெரிவித்தார். குறித்த இளைஞர்  2023.07.25 ஆம் தேதி வெளிநாட்டு வேலை வாய்ப்பின் நிமித்தம் சவுதி அரேபியாவுக்குச் செல்ல இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. காயமடைந்த இவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


பொலீஸ் சாஜன் சஞ்சே (PS 43519) என்பவரே குறித்த துப்பாக்கிச் சூடை நிகழ்த்தி இருக்கிறார் எனவும் இது ஓர் மிலேட்சித்தனமான துப்பாக்கிச் சூடு என குறித்த பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர். 


ஜப்பான் போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பொலீசார் வீணாக மக்களை குறை காண்பதில்லை. அவ்வாறு அவசியம் கருதி ஏதாவது பரிசோதனை நடவடிக்கைகளை செய்தால் குறித்த பரிசோதனை நடவடிக்கை செய்யப்பட்ட சாரதியிடம் பொலீசார் இறுதியில் மன்னிப்புக் கோரி விட்டுச் செல்வார்களாம். இலங்கைப் பொலீசாருக்கும் ஜப்பான் பொலீசாருக்கும் உள்ள இடைவெளியும் வேறுபாடும் இதுதான். இது தவிர இன்னும் பல அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கு சமூக  உளவியல் தொடர்பான  கருத்தரங்குகளும் பயிற்சிப் பட்டறைகளும் நடைபெறுகின்றன.


இவ்வாறான நடைமுறைகள் இலங்கைப் பொலீஸ் திணைக்களத்திற்கும் அவசியமானது என்பதை இவ்வாறான மூர்க்கத்தனமான சம்பவங்கள் எமக்கு சான்று பயிற்கின்றது. 



Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top