கொழும்பு தேசிய வைத்தியசாலை செலுத்த வேண்டிய 338 மில்லியன் ரூபா மின் கட்டணம் தொடர்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 339 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்படாமையினால், மின்வெட்டுக்கான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஜதலம்ப தேசிய வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை சுமார் ஐந்து மாத காலமாக வழங்கப்படாததால்,வைத்தியசாலையின் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அரங்குகளில் தற்போது அதிகளவான நோயாளர்கள் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நிலையில் மின்வெட்டு ஏற்பட்டால் நோயாளர்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
இருப்பினும் இந்த விடயம் தனக்கு தெரியாது எனவும்,நாட்டின் எந்தவொரு வைத்தியசாலையினதும் மின் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது எனவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் உறுதியளித்துள்ளார்.