தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கான ஐந்து புதிய உறுப்பினர்கள் நேற்று (22.06.2023) அரசியலமைப்பு பேரவையினால் பெயரிடப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பெயரிடப்பட்டுள்ள உறுப்பினர்களில் தற்போதைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் எவரும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் முன்னாள் சட்ட வரைவாளர், தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மற்றும் முன்னாள் அதிகாரி ஒருவர் அடங்குவதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள், அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்ட போதிலும், தேர்தல் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை நியமிப்பது சிறிது காலம் தாமதமானது.
தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பு வௌியாகியிருந்தமையே அதற்கான காரணமாகும்.அவ்வாறான நிலையில் தற்போதுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவை மாற்றுவது பொருத்தமானதல்ல என சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பது தாமதமானது.
அரசியலமைப்பு சபையினால் தெரிவு செய்யப்பட்ட இந்த ஐந்து உறுப்பினர்களின் பெயர்களை ஓரிரண்டு நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.