உ.பி.யில் இளைஞர் தனது காதலித்த பெண்ணையே கொலை செய்துவிட்டு, சடலத்தை 2 வாரமாக வீட்டு தொட்டியில் மறைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஒரு நபர் தனது காதலியைக் கொன்று, சடலத்தை வீட்டில் உள்ள தொட்டியில் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.. யமுனாபர் கர்ச்சனா பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மஹேவா பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் என்பவரின் வீட்டில் இருந்து ராஜ் கேசர் (35) என்பவரின் உடல் வெள்ளிக்கிழமை பொலிசாரால் மீட்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு முன்பு அரவிந்த் தன் காதலி ராஜ் கேசரை கொன்று, அவரது சடலத்தை தனது வீட்டில் உள்ள தொட்டியில் மறைத்துவிட்டார் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மே 30 அன்று, கேசரின் குடும்பத்தினர் அவரைக் காணவில்லை என்று பொலிஸில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். கேசரின் செல்போனைப் பெற்று அதில் உள்ள அழைப்பு விவரத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தியதில் அரவிந்த் வீட்டில் ராஜ் கேசர் சடலமாக மீட்கப்பட்டார்.
அரவிந்த்தை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டபோது, அவர் ராஜ் கேசரைக் தான் காதலித்து வந்ததையும் கொலை செய்து வீட்டில் ஒளித்துவைத்திருப்பதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ராஜ் கேசரின் உடலைக் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.