மாளிகைக்காடு நிருபர்
அம்பாரை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் மாணவத்தலைவர்களின் தலைவர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.பி.முஜீன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுகளில் கல்வி அமைச்சின் முஸ்லிம் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் என்.ரி.நசுமுடீன் மற்றும் அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எம்.றகுமதுல்லா உள்ளிட்ட கொழும்பு சாகிறா கல்லூரியின் அதிபர் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி அதிபர் மற்றும் வைத்தியர்கள் பாடாசலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நீச்சல் பயிற்சி தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. இதன் பின்னராக பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பல்வேறு தலைமைத்துவ விழிப்புணர்வு உரைகளும் நிகழ்வின் நோக்கம் பற்றிய கருத்துகளும் அதிதிகளால் முன்வைக்கப்பட்டன. இதேநேரம் மாணவர்கள் குழுக்களாக இணைந்து குழுச்செயற்பாட்டிலும் ஈடுபட்டனர். அத்தோடு மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட புத்தாக்க உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.
மாணவ தலைவர்களின் மனப்பாங்கு மற்றும் உளவிருத்தி செயற்பாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதுடன் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் வேலைத்திட்டமாகவும் அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் அக்கரைப்பற்று ஜும்மா பெரியபள்ளிவாசல் தலைவர் எஸ்.எம். சபீஸ் கருத்து தெரிவிக்கும் போது,
மாணவர்களின் உயர்ச்சிக்காக இயங்கும் என்.ரி.நசுமுடீன் அவர்களை மனதார வாழ்த்துகின்றோம். அர்ப்பணிப்புடன் இயங்கும் அதிகாரிகள் பல அரசியல்வாதிகளால் செய்துமுடிக்க முடியாத வேலைகளைக்கூட இலகுவாக செய்துவிட்டு போகின்றார்கள் உதராணமாக உதாரணமாக என்.ரி.சிராஜுதீன் அவர்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளராக இருந்தபோது பல ஊர்களுக்கு நவீன வீதி விளக்குகள் மற்றும் காபட் வீதிகளை இலகுவாக கொண்டு சேர்த்திருந்தார். அதேபோன்று கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் என்.ரி.நசுமுடீன் அவர்கள் முதன்முறையாக அம்பாரை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளில் தெரிவுசெய்யப்பட்ட மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்வினை ஒழுங்கமைத்துகொடுத்திருந்தார்
இளமைப்பருவத்திலிருந்தே வாதங்களை களைந்து சிறந்த தலைவர்களை உருவாக்கும் அவர்களது முயற்சி அளப்பெரியது அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கின்றோம். இயங்கக்கூடிய அதிகாரிகளை நாம் ஏன் உருவாக்க வேண்டும்? என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டாகும். மேலும் இந்நிகழ்வுகளை சிறப்பாக நடாத்திமுடிக்க உதவிய அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் ஆசியர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள் உரித்தாகட்டும் என்று தெரிவித்துள்ளார்.