இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2-ம் திகதி இரவு நேரத்தில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த விபத்தில் விபத்துக்குள்ளான புதுமணத் தம்பதியினர் தற்போது ஒன்றாக மருத்துவமனையில் இருக்கும் செய்தி வெளிவந்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் ஹவுராவைச் சேர்ந்த முகமது ரஃபீக், தீபிகா பாலி ஆகியோருக்கு, கடந்த மே மாதம் 31-ம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.
அதன் பின்னர் இருவரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஜூன் 2-ம் திகதி பயணம் செய்துள்ளனர்.
அப்போது இவர்கள் பயணம் செய்த ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் முகமது ரஃபீக் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், தீபிகா பாலி அறுவை சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் கணவர் படுகாயம் அடைந்த நிலையில், அவரையும் தன்னையும் ஒரே இடத்தில வைத்து சிகிச்சை அளிக்குமாறு தீபிகா கூறியுள்ளார்.
எனினும் அவர்களுக்கு வேறு வேறு இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தீபிகா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரின் கணவர் தற்போதும் சிகிச்சையில் உள்ளார். அவரை அவரின் மனைவி தற்போது கவனித்து வருகிறார். இந்த தகவல் தற்போது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.