உயிர்வாழும் முதுசங்கள் (Living legends) 6 பிரபல சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஜாவித் யூஸுப்

 



கலாநிதி றவூப் ஸெய்ன்


முஸ்லிம்கள் தொடர்பாக இடம்பெறும் கொழும்பு கூட்டங்களில் நான் அடிக்கடி சந்திக்கும் இரண்டு ஆளுமைகள் உள்ளனர். ஒருவர் மாஸ் யூஸுப்.மற்றவர் ஜாவித் யூஸுப்.இருவரும் சட்டத்தரணிகள். அதேவேளை தீராத சமூகப் பற்றுக் கொண்டவர்கள். மாஸ் யுஸுபைப்பற்றி இன்னொரு தருணம் எழுதவுள்ளேன் .இப்போது ஜாவித் யூஸுப் குறித்து நினைவூட்ட எண்ணுகிறேன். தான் தனது தொழில்வாண்மை.வருமானம்.வசதியான வாழ்க்கை .தனது குடும்பம் என்று வாழும் மனிதர்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக கொழும்பில் இப்படியொரு திறமை வாய்ந்த சமூகப்போராளியைக்காண்பது அரிதிலும் அரிது என்பேன்.


அஹ்மத் ஜாவித் யூஸுப் இலங்கை உச்சநீதிமன்ற வழக்கறிஞர். குற்றவியல், வணிகம்,சொத்து, அரசியலமைப்பு, மனித உரிமைகள் போன்ற பல்வேறு பரப்புகளில் தொழின்மைசார் சட்டத்தரணியாக விளங்கும் அதேவேளை பல்வேறு நிறுவனங்களுடன் தன்னைப்பிணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார். சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்த state counsel லிலும் கடந்த காலங்களில் பணியாற்றியுள்ளார். சவுதி அறேபியாவுக்கான இலங்கைத்தூதராகவும் கடமையாற்றியுள்ள அவர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் சிரேஷ்ட ஆலோசகராகவும் விளங்கியிருக்கிறார். முரண்பாட்டுத்தீர்வு மற்றும் மனித உரிமை விவகாரங்களில் ஆழ்ந்த அனுபவமும் ஈடுபாடும் கொண்ட ஜாவித் யூஸுப் அவர்கள் ,இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினராகவும் அங்கத்துவம் வகுத்துள்ளார் என்பது கவனிப்புக்குரியது.


அவ்வப்போது பதவியில் இருக்கும் ஜனாதிபதிகளால் நியமிக்கப்படும் பல ஆணைக்குழுக்களின் உறுப்பினராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சந்திரிக்கா தலைமையில் அரச ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இன ஐக்கியத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான நிலையத்தின் முகாமைத்துவக் குழுவிலும் அங்கத்துவம் பெற்றிருந்த ஜாவித் யூஸுப் பல தேசிய நலப்பணிகளை முன்னெடுத்தார்.2019 இல் நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து முன்னாள் ஜனாதிபதி மைதரியினால் நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவிலும் இவர் அங்கத்துவம் வகித்துள்ளார்.


அனைத்துக்கும் அப்பால் ஜாவித் அவர்கள் ஒரு சமூகப் பற்றாளர். முஸ்லிம் சமூக அரசியல்.பாதுகாப்பு கல்வி முன்னேற்றத்தில் தீராத அக்கறை கொண்டவர்.நான் மாவனெல்லைக் கலவரம் நடந்த பின்னர் ஜம்மியத்துல் உலமாவின் பழைய கட்டடத்தில் நடந்த கூட்டத்தில் அவரை முதலில் சந்தித்தேன் அது 2002 ஆம் ஆண்டு. அதற்குப்பின்னர் கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு கலந்துரையாடல்கள் கூட்டங்களில் எல்லாம் அவரை நான் பார்த்திருக்கிறேன். அறிவு பூர்வமான யதார்த்தமான ஆலோசனைகளை அவர் முன்வைப்பார்.சமூகம் சார்பாக நடக்கும் எந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தாலும் பெரும்பாலும் கலந்து தனது பங்களிப்பை வழங்குவார்.


சட்டத்தரணி ஜாவித் யூஸுப் ஓர் ஊடகவியலாளரும் கூட.sunday times ஆங்கில வார இதழில் தேசிய விவகாரங்களை நாட்டின் நற்பிரஜை என்ற வகையிலும் ஒரு முஸ்லிம் என்ற நோக்கிலும் தொடராக எழுதி வருகின்றார்.அது அவருக்கு கிடைத்த தேசியப் பெருமை ஆகும். கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் அரசியல் அதிகாரப்பகிர்வு குறித்தும் ஆழ்ந்த பல ஆய்வுக்கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.ஆங்கிலத்தில் நல்ல ஆற்றல் கொண்ட இத்தகைய ஆளுமைகள் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பலம் strength என்பதில் கருத்து மாறுபாடுகள் இல்லை.ஆனால் பொதுவாக ஆங்கிலம் வழி யாக பங்களிப்பவர்கள் பற்றி தமிழ்ச்சூழலில் அறியப்பட்டிருப்பது மிகக் குறைவு.அதனால்தான் இந்தப்பத்தியை நான் எழுத நேரிட்டது.


சமூகப் பற்றாளர் ஜாவித் யூஸுப் போன்றவர்கள் எமது உயிர்வாழும் முதுசங்கள்.அவர்கள் போன்றோரை சமூகம் அதிக பட்சம் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அவரது ஆயுள் நீடிப்பு க்கும் தேகாரோக்கியத்திற்கும் பிரார்த்திப்போம்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section