தனியார் வருமானத்திற்கு சிறுவர் பூங்காவை தாரைவார்க்கும் தவிசாளரின் பிரேரனைக்கு எதிராக கௌரவ உறுப்பினர் M.L.முஸ்மி அவர்கள் போர்க்கொடி
இறக்காமம் பிரதேச சபையில் நேற்று (14) இடம்பெற்ற கூட்டத்தின்போது, தவிசாளரால் கொண்டுவரபட்ட சிறுவர் பூங்காவை தனியாருக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அவரால் கொண்டுவரபட்ட பிரேரனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதேச சபை உறுப்பினரான கௌரவ. எம்.எல்.முஸ்மி அவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் இது தொடர்பாக குறிப்பிடுகையில், "சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும், ஏழை சிறுவர்களின் பொழுதுபோக்குக்காகவும் எங்களுடைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும்,முன்னாள் நீர் வழங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான றவூப் ஹக்கீம் சேர் அவர்களினால் பாரிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்ட இந்த பூங்காவை தனியாருக்கு குத்தகை அடிப்படையில் கொடுத்து, அதனால் கிடைக்கும் வருமானத்தில் என்ன செய்யப்போகிறோம். மேலும், இச்செயற்பாட்டினால் பாதிக்கப்படுவது ஏழைச் சிறார்களே. இது அவர்களுக்கு பாரிய சவாலும் கூட, இதன் காரணமாகவே குறித்த பிரேரனையை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனவே, இதற்கு அனுமதி வழங்க முடியாது" என்று சபையில் கார சாரமாக உரையாற்றினார்.
இதன் போது ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான என்.எம்.ஆசிக் உட்பட பலரும் பிரேரனைக்கு எதிராகவும், முஸ்மி அவர்களின் எதிர்ப்புக்கு ஆதரவாகவும் சபையில் ஆதரவை காட்டினர்.
இந்த அமர்வின் போதே 2023 ஆம் ஆண்டுக்காக தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு முதல் வாசிப்பு தோற்கடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.