அலுவலக செய்தியாளர்
அஸ்றம் காஸிம்
சர்வதேச அளவில் ஏற்படும் புற்றுநோய்களில் நான்காவது இடத்திலும், மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்ததாக பெண்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகவும் கருப்பை புற்றுநோய் இருக்கிறது.
ஆண்டுதோறும் சுமார் 1 லட்சத்து 22 ஆயிரம் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளிவிவரம் சொல்லி எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
‘‘கருப்பையின் கீழ்ப்பகுதியை தாக்கும் இந்த புற்றுநோய், 15 முதல் 44 வயதுக்குட்பட்ட, இனப்பெருக்கத் தகுதியுள்ள பெண்களை அதிகமாக பாதிக்கிறது. இது பெரும்பாலும் Human பபில்லோமாவுஸ் (HPV) காரணமாக ஏற்படுகிறது. வாழ்க்கைமுறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகளாலும் இந்தப் புற்றுநோய் வருகிறது.
கருப்பை வாய்ப் புற்றுநோயை வராமல் தடுக்க முடியும். மேலும், ஆரம்ப கட்டத்திலேயே கண்டுகொண்டால் குணமாக்கவும் முடியும். கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பால் குழந்தையின்மை, கர்ப்பகால சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் அங்கிருந்து பெண்ணுறுப்பு, நிணநீர்க் கணுக்கள் மற்றும் இடுப்பறையை சுற்றியுள்ள உறுப்புகளுக்கும் பரவும் அபாயமுண்டு. இதனை பரவாமல் தடுக்கும் நன்நோக்கத்தில் இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பு மருந்தேற்றல் நிகழ்வு இன்று (13) இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி Dr.றஷ்கா ஆஸ்மி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் தரம் 6,7 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான முறையே முதலாம், இரண்டாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கல்லூரியின் அதிபர் எம்.ஐ.மாஹிர், பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.ஜௌஸ், ஏ.எச்.றியாஸ் மற்றும், மேற்சுகாதார பரிசோதகர் தெல்தெனிய அவர்களும் கலந்துகொண்டனர்.