SMZ. சித்தீக் (DMC)
செய்தி வாசிப்பு இவரது கனவு, ஊடகத்துறை இவர் வாழ்வின் உரம். ஒரு செய்தி வாசிப்பாளராக வரவேண்டுமென்ற கனவை தனது 31ஆவது வயதில் நிறைவேற்றினார் ஹஸ்லி முனாஸ்.
அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் முனாஸ் மொஹமட் ஹஸ்லி சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வசந்தம் தொலைக்காட்சியின் புதிய செய்தி வாசிப்பாளராக கால்தடம் பதித்துள்ளார். அரச தொலைக்காட்சியொன்றில் முதலாவது செய்தி வாசிப்பாளராக இறக்காமம் பிரதேசத்திலிருந்து முதலாவதாக கால்தடம் பதித்த பெருமையும் இவரையே சாரும். விடா முயற்சியும், தொழில் வாண்மையும், நேர்மையான உழைப்பும் ஹஸ்லி முனாஸை ஊடக பணியின் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றது.
வாய்ப்புக்கள் சிலரை சாதாரணமாக வந்தடையும். இன்னும் சிலர் வாய்ப்புகள் இன்றியே வாழ்க்கையை தொலைத்திருப்பார்கள். ஒரு இலக்கை அடைவதற்கான முயற்சியுடன் வாழ்க்கையில் போராடுபவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு அவருக்கு ஒஸ்கார் விருது பெற்றதைப் போன்ற மட்டில்லா மகிழ்ச்சியை கொடுக்கும். ஹஸ்லி முனாஸ் இதில் மூன்றாம் ரகத்தைச் சேர்ந்தவர். ஊடகத்துறையின் ஊடாக தன்னையும் தனது பிரதேசத்தின் பெருமையையும் நிலைநிறுத்த பல ஆண்டுகள் போராடினார். ஊடகத்துறையில் ஒருவரை வீழ்த்துவதற்கு பல வழிகளிலும் சூழ்ச்சிகள் இருப்பது பொதுவான ஒன்றே. இது போன்ற பல வசைபாடுதல்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் தனது ஊடக வாழ்க்கை பயணத்தில் ஹஸ்லி முகம்கொடுத்தார்.
அழுத்தங்களுக்கு மத்தியிலும் அவரை ஊடகத்துறையில் நிலைப்பதற்கு பல காரணங்கள் பின்புலமாக இருந்தன. ஹஸ்லியின் குடும்பத்தினரும், நண்பர்களும் அவருக்கு வழங்கிய பக்கபலம் அவரை தடைகளை கடந்து முன்னேறிச் செல்ல உதவியது. இன்றைய பொருளாதார நெருக்கடியில் கொழும்பில் தொழில் செய்வது, இலகுவான ஒன்றல்ல. கொழும்பில் இருந்த வண்ணம், தன்னை வந்து சூழ்ந்த பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளித்துக்கொண்டு, ஊடக கனவுக்காக போராடிய ஹஸ்லி அதற்கான வெகுமதியை நேற்றைய தினத்திலிந்து அனுபவிக்க ஆரம்பித்துள்ளார். இவரின் முயற்சி, அனைவருக்கும் முன்மாதிரியாகும். வாய்ப்புக்கள் வருமென காத்திருக்காது, அதற்காக போராட வேண்டுமென்பதை ஹஸ்லியின் வெற்றிப்பயணம் சான்றுபகிர்கிறது.
இறக்காமம் 6ம் பிரிவைச் சேர்ந்த ஏ.எல்.எம்.முனாஸ் மற்றும் பி.எம்.ஜனூபா ஆகியோரின் மூத்த புதல்வாரன இவர் தனது பாடசாலை கல்வியை இறக்காமம் அல்.அஷ்ரப் மத்திய கல்லூரியில் பயின்றார். கொழும்பு இதழியில் கல்லூரியில் தொலைக்காட்சி பிரிவில் டிப்ளோமா பாடநெறியையும் பூர்த்தி செய்துள்ளார். தன்னை இத்துறையில் மிளிர வைக்க வேண்டுமென்ற நோக்கில் பல்வேறுபட்ட ஊடகத்துறை சார்ந்த செயலமர்வுகளிலும் பங்கேற்றார். இவர் தற்போது சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வசந்தம் செய்திப் பிரிவில் உதவி செய்தி தயாரிப்பாளராக பணியாற்றுகின்றார்.
விடுமுறைக்கு, விடுமுறை கொடுத்து தனது இலட்சியத்திற்காக இரவு பகலாக இரை தேடிய ஹஸ்லி முனாஸ் இன்னும் பல சாதனைகள் படைக்க எமது ஊடக நிறுவனத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.