சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு புள்ளிகளை வழங்கும் முறை அடுத்த வருடம் ஜனவரி முதல் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (28) விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர், அந்த முறை தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்தார்.
தரமான சாரதியை உருவாக்கும் நோக்கில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படுவதாகவும், ஆனால் இந்த முறை அங்கீகரிக்கப்பட்டு 8 வருடங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, சாரதிகளுக்கு 32 வீதிக் குற்றங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும் என்றும், 24 புள்ளிகள் குறைக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் ஓராண்டுக்கு இரத்து செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சோதனைக் காலத்தில் சாரதி ஒருவர் 12 புள்ளிகளைப் பெற்றால், ஒரு வருடத்திற்கு அந்த சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.