யாழ்ப்பாணம், வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் தவறி விழுந்து நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் இன்று (23) காலை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தூர், கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயதான பாஸ்கரன் திலக்சன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கைகள் தங்கூசி வலையினால் பின்னப்பட்டிருப்பாதலும் முகத்தில் காயங்கள் இருப்பதாலும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் தவறி விழுந்து காணாமல் போன நிலையில் நேற்று மாலை முதல் அவரைத் தேடும் பணிகள் இடம்பெற்றன.
இந்நிலையில் தவறிவிழுந்த இளைஞனை தேடும் பணியில் இரவு முழுவதும் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் முயற்சி பலனளிக்காத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரு இளைஞன் தவறி விழவே ஏனையவர்கள் அச்சத்தில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பி சென்ற இளைஞர்கள் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-யாழ். நிருபர் பிரதீபன்