நியூசிலாந்து அணியின் அரைஇறுதி வாய்ப்பு இந்த வெற்றியின் மூலம் கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளது. அடிலெய்டு, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக் முன்னேறும். இன்னும் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இன்னும் எந்த அணியும் அரைஇறுதியை எட்டவில்லை.
இந்த நிலையில் தொடரில் இன்று குரூப்1-ல் முக்கியமான இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் அடிலெய்டில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டம் ஒன்றில் நியூசிலாந்து-அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 61 ரன்னும், டேரில் மிட்செல் 31 ரன்னும், ஆலென் 32 ரன்னும் அடித்தனர்.
அயர்லாந்து அணி தரப்பில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழத்தினார். Also Read - ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து முகமது நபி விலகல் இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரகளாக கேப்டன் பால்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் களம் புகுந்தனர். சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது.
இதில் ஸ்டிர்லிங் 37 ரன்னுக்கும், பால்பிர்னி 30 ரன்னுக்கும், அடுத்து களம் இறங்கிய டக்கர் 13 ரன்னுக்கும், ஹேரி டெக்டர் 2 ரன்னுக்கும், டெலனி 20 ரன்னுக்கும், கர்டிஸ் காம்பர் 7 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
நியூசிலாந்து அணி தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்டும், சாண்ட்னெர், சோதி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணியின் அரைஇறுதி வாய்ப்பு உறுதி ஆகிவிட்டது எனலாம். எனினும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளின் ஆட்டம் முடிந்த பின்னரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்