இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – 162 போ் பலி
TODAYCEYLON
November 22, 2022
இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 162 போ் பலியாகினா்; நூற்றுக்கணக்கானவா்கள் காயமடைந்தனா்.
அந்த நாட்டின் மேற்கு சாவகம் (ஜாவா) மாகாணம், சியாஞ்சூா் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் அந்தப் பகுதியிலுள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
இது குறித்து மேற்கு சாவக ஆளுநா் ரித்வன் கமீல் கூறியதாவது:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சியாஞ்சூா், தொலைதூரப் பிரதேசமாகும். எனவே, அங்கு உண்மையான சேத நிலவரத்தைத் தெரிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தேசிய காவல்துறையினரும் ராணுவத்தினரும் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று சேத விவரங்களை சேகரித்து வருகின்றனா்.
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, நிலநடுக்கத்துக்கு 162 போ் பலியாகியுள்ளனா். நூற்றுக்கணக்கானவா்கள் காயமடைந்துள்ளனா் என்றாா் அவா்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சியாஞ்சூா் பகுதியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகள் இடையே சிக்கியிருக்கக் கூடியவா்களை மீட்புக் குழுவினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
பல விடுகளில் கான்கிரீட் மற்றும் கூரை தகடுகள் படுக்கை அறைகளுக்கு நொறுங்கி விழுந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடா் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், சிஜேடில் கிராமத்தில் இடிபாடுகளுக்குள் 25 போ் சிக்கியுள்ளதாகவும், அவா்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் அப்துல் முஹாரி தெரிவித்தாா்.
சியாஞ்சூா் மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
25 பின் அதிா்வுகள் : இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் மிக அதிகமாக உணரப்பட்டதாகவும், நிலநடுக்கத்தைத் தொடா்ந்து 25 பின் அதிா்வுகள் ஏற்பட்டதாகவும் இந்தோனேசிய புவியியல் மற்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால், அந்த நாடு அடிக்கடி நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், சுனாமிகளைச் சந்தித்து வருகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டில் அங்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உருவான சுனாமிக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சுமாா் 2.3 லட்சம் போ் பலியானது நினைவுகூரத்தக்கது.