21 வருடங்களின் பின் மாகாண மட்டத்தில் பதக்கம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவான கல்முனை அல் மிஸ்பாஹ் மாணவனுக்கு அமோக வரவேற்பு.




(எம்.என்.எம்.அப்ராஸ்)


நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டி நிகழ்ச்சியில் தரம்-10 இல் கல்வி பயிலும்  மாணவன் எம்.எச்.எம். அல் கிபத் வெண்கலப் பதக்கத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். 


கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய பாடசாலை வரலாற்றில் 21 வருடங்களின் பின்னர் மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்றதுடன் தனி நபர் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவானமை இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவனையும் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய ஏனைய மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களையும் வாழ்த்தி ஊர்வலமாக வரவேற்கும் நிகழ்வு   கல்முனையில் இடம்பெற்றது.


பாடசாலையில் அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காலை ஆராதனை கூட்டத்தின் போது தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவன் அவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


பாடசாலையின் பிரதி அதிபரும் விளையாட்டுக் குழு தலைவருமான ஐ.எல்.எம்.ஜின்னாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு ஊர்வலத்தின் போது கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகர் மற்றும் பெரும் குற்றபிரிவு பொறுப்பதிகாரி ஏ.ரபிக் அவர்களாலும் கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை அதிபர்,பிரதி அதிபர், ஆசிரியர்களினாலும்  கல்முனை அல் அஸ்கர்  வித்தியாலயத்தின் அதிபர் பிரதி அதிபர்கள் ஆசிரியர்களாலும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆசிரியர்களாலும் பெற்றோர்கள் வர்த்தகர்கள், சமூக பிரமுகர்கள், பாடசாலை நலன் விரும்பிகள், பொது மக்கள் ஆகியோர் மாலையிட்டு கௌரவமளித்து பல்வேறு அன்பளிப்புக்கள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.


அத்துடன் மு.கா. பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் அவர்களினால்  மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களையும் வாழ்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன்,தேசிய மட்டத்திற்கு தெரிவான எம்.எச்.எம்.அல் கிபத்துக்கு ஒருதொகை பணப்பரிசும் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.






Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section