சவூதி அரேபியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளைப் பார்வையிடுவதற்காக பாலைவனங்களுக்கு ஊடாக நடந்து கத்தார் நோக்கி சென்று கொண்டிருக்கிறார். 33 வயதான அப்துல்லா அல்சுல்மி என்பவரே இந்த இளைஞர் ஆவார்.
இரு மாதங்களில் 1,600 கிலேமீற்றர் தூரம் தனியாக நடந்து சென்று கத்தாரை அடைவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் கிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள ஒரு நாடு கத்தார். ஆனால் அப்துல்லா அல்சுல்மி, சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியிலுள்ள நகரான ஜெத்தாவைச் சேர்ந்தவர். அங்கிருந்தே அவர் சவூதி அரேபியாவை கால் நடையாக குறுக்கறுத்துச் சென்று கத்தாரை அடையவுள்ளார்.
பாலைவனங்களையும் கடந்து செல்ல வேண்டியுள்ள 1,600 கிலோமீற்றர் தூரம் கொண்ட இப்பயணத்தை தனியாகவே அப்துல்லா அல்சுல்மி மேற்கொள்கின்றமை குறிப்பித்தக்கது.
உலக கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு சவூதி அரேபியாவும் தகுதி பெற்றுள்ளது. உலக கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், சவூதி அரேபியாவின் முதல் போட்டியான ஆர்ஜென்டீனாவுடனான போட்டியை நேரில் காண்பதற்கு அல்சுல்மி திட்டமிட்டுள்ளார். கத்தாரின் லுசெய்ல் நகரில் நவம்பர் 22 ஆம் திகதி இப்போட்டி நடைபெறவுள்ளது.
கத்தார் உலக கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி தொடர்பான ஊக்குவிப்பு நிகழ்ச்சியொன்றை பார்த்துக் கொண்டிருந்தபோது இப்பயணத்துக்கான எண்ணம் தன் மனதில் தோன்றியதாக அல்சுல்மி கூறுகிறார்.
ஸ்னெப்சாட் சமூக வலைத்தளத்தில் அப்துல்லா அல்சுல்மியை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். அவர்களுக்காக தனது இப்பயணத்தை ஆவணப்படுத்தி வருகிறார் அல்சுல்மி.
"உலக கிண்ணப் போட்டிகளுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என விரும்புகிறோம். உலக கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என விரும்பும் கத்தார் நாட்டவர் ஒருவரைப் போன்றே நான் உணர்கிறேன்" என அப்துல்லா அல்சுல்மி கூறியுள்ளார்.
கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் வசித்த அப்துல்லா அல்சுல்மி அந்நாடுகளில் நீண்டதூர சாகச நடைப் பயணங்களை மேற்கொண்டவர் என்பது குறிப்பித்தக்கது.
கத்தார் நோக்கிய பயணத்தை தினமும் சூரிய உதயத்துடன் அவர் ஆரம்பித்து காலை 10 அல்லது 10.30 மணிவரை நடக்கிறார். அதன்பின், கடுமையான வெயில் காரணமாக பயணத்தை இடைநிறுத்தி பிற்பகலில் மீண்டும் அதை ஆரம்பித்து சூரியன் மறையும் வரை நடக்கிறார்.
தினமும் 35 கிலோமீற்றர் நடக்க வேண்டும் என்பது அவரின் இலக்கு. இந்த இலக்கை பூர்த்தி செய்வதற்காக சிலவேளைகளில் இரவிலும் சில மணித்தியாலங்கள் அவர் நடக்கிறார்.
தனது பயணப் பொதியின் சுமையை குறைப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் இணைந்த கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்கிறார். பெரும்பாலும் சோறு, கோழிஇறைச்சி ஆகியவற்றை அவர் உட்கொள்கிறார்.
பள்ளிவாசல்களில் தனது உடலையை ஆடைகளையும் அவர் சுத்தமாக்கிக் கொள்கிறார்.
அவரை வழியில் காணும் சவூதி மக்கள் அவரை வாழ்த்தி, சிற்றுண்டிகள், பழச்சாறுகள் போன்றவற்றை வழங்கியுள்ளனர்.
உறங்குவதற்கு இடம்தேடி சிரமப்பட்டமை, தனது கூடாரத்துக்கு அருகில் பெரும் எண்ணிக்கையான தேள்கள் காணப்பட்டமை போன்ற அனுபவங்களும் அவருக்கு ஏற்பட்டுள்ளன.
“சவூதியின் ஜெத்தாவிலிருந்து கத்தாரின் தோஹா நோக்கி நடக்கும்போது ஒவ்வொரு 100 கிலோமீற்றர்களும் வித்தியாசமானவைகளாக உள்ளன.
அதாவது, முதல் 100 கிலோமீற்றர் மணல் குன்றுகளாக இருக்கும். அதன்பின் மலைகள் காணப்படும். பின்னர் வெற்று நிலங்கள் காணப்படும். அதன்பின் விவசாயப் பண்ணைகள் இருக்கும்.
இந்த அனைத்து வகையான பிராந்தியங்களுக்கு ஊடாகவும் 2 மாதங்களில் நான் பயணிக்கிறேன் இது. அழகான விடயம்” என அப்துல்லா அல்சுல்மி தெரிவித்துள்ளார்....