காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கல்பேட்டா பகுதியில் நடைபெற்ற படை வீரர்கள் கொடி நாள் கொண்டாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:-
''நாட்டில் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கற்பழிப்பு, வன்கொடுமை என செய்தித்தாள்களில் தினமும் செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது.
பழங்குடியினர், தலித்துகள் என சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே வன்முறை சம்பவங்கள் வேகமாக அதிகரித்துவருகிறது. நாட்டின் நிர்வாக கட்டமைப்பு உடைந்துவிட்டது. மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர்.
இதற்கு காரணம் என்னவென்றால் இந்த நாட்டை இயக்கிக் கொண்டிருக்கும் நபர் (பிரதமர் மோடி) வன்முறை மற்றும் பிரிவினைவாத சக்திகளை நம்புகிறார். உலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா மாறிவிட்டது.
பெண்களை இந்தியாவில் உள்ளவர்கள் ஏன் மகள்கள், சகோதரிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க மறுக்கிறார்கள்? என வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு பாஜக எம்.எல்.ஏ. பெண்ணை கற்பழித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ஆனால் இதுபற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை’’ என தெரிவித்தார்.